Tuesday, March 21, 2017

என்ன தவம் செய்தனை

இரண்டாயிரத்து பதினாறு தீபாவளி எனக்கு இப்படி அமையும் ன்னு நான் நெனச்சே பார்க்கலை. ஓடி விளையாடறேன் பேர்வழி ன்னு பள்ளத்துல கால விட்டு விழுந்து சிலப்பல எலும்புகள முறித்து சர்ஜரி பண்ணி, இதோ இப்ப வரைக்கும் படுக்கைல தான் கெடக்குறேன்.

என்னடா இவளோ சோகமான செய்தி சொல்லும் போது 'என்ன தவம் செய்தனை' ன்னு டைட்டில் வெச்சி இருக்கேன் ன்னு பாக்கறீங்களா? சொல்றேன் (வேணாம்னா உடவா போறே? அப்பிடின்னு கேக்க கூடாது)

என்ன தான் வலி, வேதனை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ன்னு பல விஷயம் இருந்தாலும் இந்த அடியினால எனக்கு புதுசா இருந்த சில விஷயங்கள் இருக்கு. எவ்வளவு விஷயத்துல நா அதிர்ஷ்டம் அடஞ்சிருக்கேன்ன்னு 'கவுன்ட் மை ப்ளஸ்சிங்' பண்றேன்.

முதல் அதிர்ஷ்டமே நா விழும் போது கூடி இருந்த நண்பர்கள். நண்பர் வசந்த் வீட்ல தான் சம்பவம் நடந்தது. நா விழுந்ததும் என்ன தூக்கிட்டு போக நாலு பேரு இருந்ததே பெரும் பாக்கியம். யாரும் இல்லாத எடத்துலயோ  இல்ல எங்க வீட்டுக்கிட்ட விழுந்திருந்தாலோ என்ன பண்ணிருப்பேன் ன்னு எனக்கே தெரியல.

என்னை அலேக்கா தூக்கி சென்ற அன்பு நெஞ்சங்கள் திரு வசந்த், திரு பீக்கே என்கிற பிரவீன் குமார், திரு சுந்தர் மற்றும் திரு நவீன் மற்றும் அவர்கள் குடும்பத்தார். விழுந்த இடத்தில இருந்து வீட்டுக்கும், வீட்ல இருந்து ஹாஸ்பிடல்க்கும் குண்டு கட்டா தூக்கிட்டு போய்டாங்க. 'இதென்னப்பா, யார் வேணா செய்வாங்க' ன்னு சொல்றவங்க  முழு கதையும் கேளுங்க.

இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல நம்ப கூட உறவினர்கள் இருக்கறத்த விட நண்பர்கள் இருக்கறது ரொம்ப நல்லது. டென்ஷன் கம்மி. வலி ல ஒரு கால்ல நொண்டி நொண்டி வரும்போதும் 'பக்கதுல ஐஸ் கிரீம் கடை இருக்கு ஐஸ் கிரீம் சாப்பிடுறியா?' ன்னு (சுந்தர்) கேட்டுட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிக்க நண்பர்களால தான் முடியும்.
அதே சமயத்துல 'இப்படி நடந்து போச்சே' ன்னு வருத்தப் பட்டு மூஞ்ச உம்முன்னு வெச்சிக்கிட்டாலும்   (வசந்த்) 'ஒண்ணும் ஆகாது, கவலை படாதீங்க' ன்னு சொல்லவும் நண்பர்களால தான் முடியும்.

நண்பர் வீட்டில சம்பவம் நடந்ததாலயும், என் வீடு ஒரு மணி நேரம் தூரத்துல இருந்ததாலயும், வீடு ரெண்டாவது மாடில இருந்ததாலயும் நா வசந்த் வீட்லயும் சுந்தர் வீட்லயும் மாறி மாறி ரெண்டு வாரம் தங்கி இருந்தேன்.

அடிபட்ட முதல் இரண்டு நாள், என் மனைவிக்கு அவ்வளவா என்ன சரியா தாங்கி புடிக்கவோ என் கால தூக்கி சரியா தலையணையில உயர்த்தி வைக்கவோ தெரியல. வசந்த் தான் வலிக்காம நகர்த்தினார். காலைலயும் சாயந்தரமும் முன்ராத்திரியும் உதவிக்கு எப்பவும் இருந்தார். வசந்த் இவ்வளோ தூரம் பண்றது ஆச்சர்யம் இல்ல, எங்களுக்கு அவ்வளோ பழக்கம். ஆனா நவீன் (வசந்தின் மைத்துனர்) எனக்கு மூன்று முறை மட்டுமே பார்த்த, ரொம்ப பரிச்சியம் இல்லாத நபர். இந்தியாவில் இருந்து  ஒரு மாசம் முன்னாடி தான் வந்திருந்தார். அவர் எனக்கு பண்ண உதவிகள் அளப்பரியது. என்ன தூக்கிட்டு போனதுல பாதி வெயிட் அவர் தான் தூக்கிருப்பார். 'நா இங்க தான் ஹால்ல படுத்து இருக்கேன்.. என்ன வேணும்னாலும் கூப்பிடுங்க' ன்னு சொன்னார். சில இரவுகள்ல லைட் எரிஞ்சு அணையும். என்னடா ன்னு பார்த்தா நவீன் வந்து நா நல்லா இருக்கேனா தூங்கறேனா ன்னு பார்த்துட்டு போயிட்டிருப்பார்.

வசந்தின் மனைவி லாவண்யா, என் நீண்ட காலத்து சிநேகிதி, நா அவங்க வீட்ல தங்கி இருந்த காலத்துல என்ன இந்த நிலைமைல பாக்க முடியாம நா இருந்த ரூம் பக்கமே வரல. அப்பபோ நல்ல சூப், கோழி கறி, பேக் பண்ண காய்கறிகள் மட்டும் வந்துகிட்டே இருக்கும். அவங்களுக்கு அந்த டைம்ல உடம்பு முடியல. ஆனா அத வெளிக்காட்டிக்கவே  இல்ல. அப்பறம் குட்டி வசந்த் - இனியா
'ஜீ  மாமா ஜீ  மாமா என்னாச்சு காலுக்கு' ன்னு தினம் நலம் விசாரிக்க வந்துடுவா. ஒரு நாள் கால்ல ஐஸ் பாக் (Ice pack) வெச்சி தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு யாரோ கால அழுத்துற வலி உணர்ந்து எழுந்து பாத்தா இனியா ஐஸ் பாக்க அமுக்கி squishy squishy ன்னு விளயாடிகிட்டு இருக்கா 😃

சுந்தர் குடும்பத்தார். என் வசதிக்காக அவர் வீட்டு ரூமை பல முறை மாற்றி அமைத்து குடுத்தார். சுந்தர் மனைவி திவ்யாதான் தியா வ முழுதும் பார்த்து கொண்டது. இங்கயும் சாப்பாட்டுக்கு, அக்கறைக்கு பஞ்சமே இல்லை. ஒரு நாள் பெட்ல உட்கார்ந்துகிட்டு தியா க்கு ஊட்டிட்டு இருந்தேன். தியா ஒரு சப்பாத்தி சாப்பிட்டு முடித்திருந்தாள். ரெண்டாவது கேப்போம் ன்னு என் மனைவிய உரக்க அழைத்தேன். அவ சமையல் அறைல இருந்ததால கேக்கல. ஆனா என் குரல் கேட்ட உடனே எனக்கு என்னமோ ஏதோ ன்னு சுந்தர் திபுதிபு ன்னு பாஞ்சு வந்து 'என்னடா ஜீவன்?' ன்னு பாசத்தோட கேட்டார். 'ஒண்ணுமில்ல சுந்தர், சப்பாத்தி தான்' ன்னு  சொன்னேன். ஆனா அவரின் அந்த பதட்டம் பெரிதும் பாதித்தது.

சுந்தரின் பசங்க தான் டைம் பாஸ், எனக்கும் என் மகளுக்கும். 'ரைம்ஸ் போடறீங்களா? ரைம்ஸ் வேணும். இப்பே வேணும்' ன்னு  வம்பு பண்ணிட்டே இருக்கும் கியூட் வசுந்தரா. என்ன பார்க்க கூச்ச பட்டு ஓர கண்ணாலேயே பாத்துட்டு போகும் பெரிய மனுஷன் விஷ்ணு. அப்பறம் அவங்க வீட்ல கெஸ்டா இருந்த, அவர் தங்கி இருந்த அறையை எனக்கு விட்டு கொடுத்து ஹாலில் தரையில் படுத்துக்கொண்ட சுந்தரின் நண்பர் ஹேமந்த். என்னை வீல்சேர் ல உட்கார வைக்க தள்ள உதவி பண்ண தயங்கவே இல்ல அவர்.

அடுத்து பிரவீன் குடும்பம். எனக்கு பேச்சுத்துணைக்கு?? எப்பவும் இருந்தார். ப்ரவீனும் திவ்யாவும் தேடித் தேடி டாபிக் கண்டுபுடிச்சி பேசினாங்க. திவ்யா இன்னும் கொஞ்சநாள் இங்க இருந்திருந்தா ஆட்டுக்கால் சூப் வந்துகிட்டே இருந்திருக்கும். ஆனா பிரவீன், திவ்யா தாய்லாந்து சென்றுவிட்டார்கள்.

இதெல்லாம் நண்பர்கள் செய்தது. பெற்றோர்கள், மாமியார், மாமனார், மகள் மற்றும் கடைசியாக ஆனால் கம்மியில்லாத (last but not least) மனைவி செய்தது எல்லாம் இவற்றுக்கும் மேல்.

இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட் ஆ ன்னு நீங்க கேக்கலாம்.
இது நடந்தது எனக்கு நல்லது னு சொல்ல வரல. இது நடந்ததால எனக்கு நடந்த நல்லத கவனிக்காம இருக்க முடியல.

எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



பி.கு. இந்த போஸ்ட் ரொம்ப நாள் முன்னாடி ஆரம்பிச்சு பாதில விட்டு draft ல இருந்து இன்னைக்கு போஸ்ட் பண்ணியே ஆகணும்னு போட்டிருக்கேன். ஏனோதானோ ன்னு போட்ட மாதிரி இருந்தா மன்னிச்சூ.....




1 comment:

  1. [5:48 PM, 3/21/2017] Viswa: Saw your post
    [5:48 PM, 3/21/2017] Viswa: Indeed very lucky
    [5:49 PM, 3/21/2017] Viswa: You are an incredible writer. Sutha tamizhum vazhakku thamizhum azhaga kalandhu kalandhu ezhudirukke
    [5:49 PM, 3/21/2017] Viswa: Expecting a book from you some day

    Thanks Viswa

    ReplyDelete