Wednesday, April 8, 2015

ஹைக்கூ எனப்படுவது யாதெனின் ....

சுஜாதாவின் வரிகள்.

ஹைக்கூ என்றால் என்ன?

ஹைக்கூ என்பது பதினேழு அசைகள் (சிலபல்ஸ்) கொண்ட ஒரு ஜப்பானிய கவிதை வடிவம். அதை இந்த நூற்றாண்டில் நவீனபடுத்தி மூன்று/நான்கு  வரிக் கவிதைகளாக்கி விட்டனர்.

எது ஹைக்கூ?

ஹைக்கூ என்பது ஒரு snapshot என்று சொல்வார்கள். தினவாழ்வில் நாம் பார்க்கும் ஆச்சர்யமான கணங்களை ஒரு சிறிய கவிதையில் சிறைபடுத்தும்போது எந்தவிதமான உருவகமோ உவமையோ சமூகச்சாடலோ இன்றி வாசகனின் சிந்தனை என்னும் குளத்தில் எறியப்பட்ட ஒரு சிறு கல்லாக இருக்க வேண்டும்.

உதாரணங்கள்:

நள்ளிரவில் 
தூரத்தில் 
ஒரு கதவு சார்த்தப்பட்டது 
-----------------------------------------
சாக்கடையில் 
மிதக்கும் முகமூடி 
மெல்லத் தலையசைக்கிறது 
---------------------------------------------
வெயிலில் 
தலைமயிர் உலர்கிறது 
தலை இல்லாமல் 
--------------------------------------------
முடிவு பெறாத கட்டடம் 
கொசுவலைக்குள் 
கூலிக்காரியின் குழந்தை 
-------------------------------------------
மொட்டை மாடி 
எட்டிப் பார்த்துக் 
குறைக்கும் நாய் 
-------------------------------------------
சைக்கிள் ரிக்க்ஷாவில் 
பாரதி வேடத்தில் 
மூன்று குழந்தைகள்.
------------------------------------------
இறுதி ஊர்வலத்தில் 
உறவினர் அழுகையைவிட 
சப்தமாய் 
பட்டாசு 
-----------------------------------------

எது ஹைக்கூ இல்லை ?

எத்தனை பேர் 
இழுத்தும் என்ன 
சேரிக்குள் வரவில்லை 
தேர்.

சமூக விமர்சனம் பொதிந்திருப்பதால் இது உண்மையான ஹைக்கூ இல்லை.

கல்யாண நேரத்தில் 
வீடு வெள்ளையடிக்கப்பட்டபோது 
விட்டதில் அவள் செருகிவைத்திருந்த 
கனவுகளும் நிறம் மாற்றப்பட்டது 

'கனவுகளை' 'கடிதங்களாய்' மாற்றினால் ஹைக்கூ வடிவம் பெறுகிறது.


நீங்களும் ஹைக்கூ எழுதி பாருங்களேன். நீங்கள் பார்த்த ஆச்சர்யம் ஒன்றை மூன்று வரிகளில் சிறைபடுத்த வேண்டும்.

Monday, March 16, 2015

Write ஆ? இல்லையா?

எழுத்துப் பணியில் தீவிரம் காட்டலாமான்னு யோசிக்கறேன். காரணங்கள் கீழே.

1) சில சிறுகதை புத்தகங்கள் வாங்கி படிச்சேன். பெரிய எழுத்தாளர்கள் எழுதினது தான். என்னுடைய கதைகள் அந்த சிறுகதைகள் அளவுக்கு ஓரளவாவது இருப்பதாய் எனக்கு தோணுது. (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையா?)

2) எனக்கு வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. எதாவது பண்ணனும் ன்னு ரொம்ப நாளா ஒண்ணும் பண்ணாம இருக்கேன். மனசுக்கு பிடித்த எதாவது ஒரு வேலை செய்யணும்ன்னு யோசிச்சப்போ குண்டு பல்பு எரிய யோசனை வந்தது. எழுதலாமே ன்னு.

3) நல்ல புத்தகங்கள் படிக்கும் போது யார் கூடயாவது பகிர்ந்து கொள்ளணும்ன்னு ஆசை. ஆனா சக வயது நண்பர்கள் யாரும் மாட்டவில்லை

4) என்னோடைய சில கதைகள படிச்சு நல்லா இருக்குன்னு ரெண்டு மூணு பேர் சொல்றாங்க. அவர்களுக்காக .

சரி அப்போ ஏன் எழுதல? காரணங்கள் கீழே.

1) நா ஒரு சோம்பேறி. ஒட்கார்ந்து யோசிக்க சோம்பேறித்தனம். கிடைக்கும் நேரங்கள் facebook க்கே செலவாயிடுது.

2) முழு எழுத்தாளன் ஆக என்ன தகுதிகள் வேணும்? எப்படி என் கதை ன்னு கட்டி காப்பது?

3) எப்படி என் கதைகளை பத்து பன்னிரண்டு வாசகர்களை தாண்டிப் படிக்க வைக்கறது? அறியோர்கள்/பெரியோர்களின் அனுபவ அறிவின் உதவி தேவை.

4) 'நான் கதை எழுதி இருக்கேன். படிங்க.. படிங்க..' ன்னு கூவி கூவி கேட்க தன்னடக்கம் தடுக்குது. அதையும் மீறி கேட்டால், கேட்டவர்கள் படிப்பதில்லை, படிப்பவர்கள் கமெண்ட்ஸ் கொடுப்பதில்லை. ஓரிருவரை தவிர.

எப்படியும் எழுதுவேன். ஆனா அடிக்கடி எழுத தூண்டுகோல் இல்லை.

நான் கேட்பது எழுத்து பணியில் புகழ் அல்ல. எழுத வைக்கும் ஊக்கம் தான்.

என்ன ? Write ஆ? இல்லையா?

Monday, March 9, 2015

வீட்டில் ஒருவர்

7th Std B Section. Number of absentees 5 என்று போர்டில் எழுதினேன்,
லஞ்ச் பீரீயட் முடிந்து தமிழ் கிளாஸ் ஆரம்பிக்கும் நேரம்.  ஒரு சாக் பீஸ் எடுத்து ஆசிரியை மேஜையில் வைத்து விட்டு வந்து என் இடத்தில் அமர்ந்தேன். 

'குட் ஆப்டர்நூன்  மிஸ்' எங்கள் கோரஸ் இடையே தமிழ் மிஸ் உள்ளே வந்தார்கள். 
'குட் ஆப்டர்நூன் எல்லாரும் தமிழ் கட்டுரை நோட் எடுங்க.' மிஸ் கேட்டார்கள். 'வீட்டில் ஒருவர்' என்ற தலைப்பில் கட்டுரை உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை பற்றி எழுதி வருமாறு வீட்டு பாடம்.

நான் எழுதி முடித்திருந்தேன். நோட் எடுக்க பையில் கை விட்டு தேடினேன். பையை மடியில் வைத்து தலை விட்டு தேடினேன். கட்டுரை நோட் கொண்டு வரவில்லை. வயிற்றை ஏதோ செய்தது.

எழுந்து நின்றேன். 
'மிஸ்... ' 
'என்ன?'
'கட்டுரை நோட் கொண்டு வரல மிஸ்'.. நா தழுதழுத்தது. 
'கொண்டு வராதவங்க எல்லாம் எழுந்திருங்க' 
எல்லாரும் கொண்டு வந்திருந்தார்கள். என்னை தவிர.

'ஏம்பா? எல்லாரும் கொண்டு வந்திருக்காங்க. உனக்கு என்ன வந்தது?'
மௌனமாய் நின்றேன். 
'கட்டுரை எழுதினியா? இல்ல எழுதாம நோட் கொண்டு வரல ன்னு பொய் சொல்றியா?'
நான் எழுதியதை கொண்டு வந்திருந்தால் மிஸ் என்னை மிகவும் பாராட்டி பேசி இருப்பார்கள். போன முறை அப்படி தான் பாராட்டு பெற்றேன். ஆனால் இன்று? 
'வாயில என்ன கொழுகட்டையா? நீ நல்லா படிக்கற பையன் ன்னு நெனச்சேனே. கிளாஸ் முடியற வரைக்கும் அப்டியே நில்லு'

அவ்வளவு தான். மிஸ் என்னை அடிக்கவில்லை. திட்டவில்லை. ஆனால் இது என்ன? என் கண்ணில் இருந்து ஏதோ பிசுபிசுவென்று வழிகிறதே? அழ கூடாது என்று திடமாக இருந்தேனே? நான் நின்றேன். கண்ணீர் நிற்கவில்லை. 

ஒவ்வொரு மாணவனாக வந்து எழுதியதை படித்தார்கள். என் தந்தை, என் தாய் என போய்  கொண்டே இருந்தது.  மிஸ் உடனே திருத்தி ஒவ்வொருவரின் கட்டுரையிலும் கையெழுத்திட்டார்கள்.  நான் அழுவதை ஓரிரு முறை கவனித்தார்கள். 

கிளாஸ் ஜன்னல் வழியே யாரோ இருவர் வருவது தெரிந்தது. திரும்பி பார்த்தேன். நம்பவே முடியாமல் உற்று பார்த்தேன். ஊரில் இருந்து என் தாத்தா அவர் நண்பர் இன்னொரு தாத்தாவுடன் வந்திருந்தார்கள். 

என் தாத்தா.. அறுபத்தி ஐந்து வயதிருக்கும் அப்போது. கரையேறிய வெள்ளை வேஷ்டி சட்டை. தோளில் துண்டு. இந்த வயதிலும் உழைப்பதின் அடையாளமாக அவரது மெலிந்த தேகம்,. அவரது அனுபவத்தை காட்டும் வரிகள் அவரது நெற்றியில் - சுருக்கங்களாக. எனக்கு தாத்தாவை பிடிக்கும். யோசித்து பார்த்தால்,  தாத்தாவை பிடிக்காத பேரர்கள் என யாரவது உண்டா என்ன? எப்பொழுதாவது ஊரில் இருந்து எங்கள் வீட்டுக்கு வருவது உண்டு. எப்பொழுதும் ஸ்கூல்க்கு வந்ததில்லை.

நான் படிக்கும் வகுப்பு தெரியாமல் ஒவ்வொரு வகுப்பாக எட்டி பார்த்துக்கொண்டே தேடி வந்திருகிறார்கள் இருவரும். ஒரு கணம் நான் இருக்கும் நிலையை நினைத்தேன். கிளாசில் மிஸ்-இடம் திட்டு வாங்கி, கை கட்டி நின்று கொண்டு அழும்  என் நிலையை தான். இந்த நிலையில் தாத்தாவை பார்க்க கூடாது என்று முடிவு செய்தேன். அவர்கள் என்னை பார்க்கும்முன் நான் அமர்ந்து பெஞ்ச் அடியில் குனிந்து கொண்டேன். 

தாத்தாவின் நண்பர் கிளாஸ் உள்ளே வந்து விட்டார். 
'மிஸ்.. நாங்க ஊர்ல இருந்து வந்து இருக்கோம். இவரோட பேரன் இங்க தான் படிக்கறான். செவன்த் ஸ்டாண்டர்ட் தான். ஆனா எந்த கிளாஸ் ன்னு தெரியல. இன்னிக்கே நாங்க ஊருக்கு திரும்பி போறோம். போறதுக்கு முன்னாடி ஒரு தடவ பாத்துட்டு போலாம் ன்னு....' 

இனி தப்ப முடியாது. கண்களை நன்றாக துடைத்து விட்டு எழுந்தேன். 
'மிஸ்.. ' அழைத்தேன். குரல் கம்மியே இருந்தது. 
தாத்தாவின் நண்பர் 'அதோ... அவன் தான்' என்று காட்டினார்.

'போய் பாத்துட்டு அவங்க கெளம்பும் வரை இருந்து அப்பறம் கிளாஸ் க்கு வா'
மிஸ் என்னை அனுப்பினார்கள். தாத்தாவிடம் போய் அமைதியாக நின்றேன். ஆதரவாக என் தோளில் கை போட்டு கொண்டார். அகத்தின் அழகு என் முகத்தில் தெரிந்தது. என்னிடம் ஒன்றும் கேட்காமலேயே ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்.

'மிஸ். ' அமைதியாக அழைத்தார்.
'நல்ல பையன். நல்லா படிப்பான். எதாவது தப்பு பண்ணி இருந்தா தெரியாம தான் பண்ணி இருப்பான். மன்னிச்சிடுங்க'

'அப்படி எல்லாம் இல்ல சார். கிளாஸ் லையே நல்ல ஒழுக்கமான பையன். நல்லா படிப்பான். தமிழ் ல இவன் தான் எப்பவும் பர்ஸ்ட்.  நல்லா வளர்த்து இருக்கீங்க. என்ன? கொஞ்சம் ரோஷக்காரன். ஏன் நோட் எடுத்துட்டு வரல ன்னு கேட்டேன். உடனே கண்ணுல பொல பொல ன்னு தண்ணி. நல்லா வருவான் பாருங்க.'

என்னவோ செய்தது எனக்கு. விட்ட இடத்தில் இருந்து  ஆரம்பித்து மீண்டும் அழுதேன். 

தாத்தா என் கண்ணளவு குனிந்து என்னை பார்த்தார். வாய் விட்டு சிரித்தார். 
தோளில் இருந்த துண்டெடுத்து என்கண்களை துடைத்தார்.
'போ..'என்று என்னை என் இடத்திற்கு அனுப்பினார்.
'ரொம்ப நன்றி மிஸ்'

விடைப்பெற்று சென்றார் என் "வீட்டில் ஒருவர்".

(முற்றும்)


பி.கு. இது உண்மை சம்பவத்தை தழுவிய ஒரு கற்பனை கதையே. 

Friday, January 23, 2015

பேர் போன படங்கள்

இப்போ வர படங்கள் பேர சொல்லி கவுன்ட்டர் ல டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கே. கவுன்ட்டர்ல இருக்கறவன் காண்டாயிடுவான்.

சில படங்கள சொல்றேன். (கொஞ்சம் நானே யோசிச்சது. கொஞ்சம் சுட்டது)

ஆம்பள:
நீங்க: ஐ படத்துக்கு டிக்கெட் எவ்வளவு?
அவன்: 80 ரூபா
நீங்க: ஆம்பளைக்கு
அவன்: ஆம்பள பொம்பள எல்லாருக்கும் ஒரே ரேட் தான்.

பொறம்போக்கு:
நீங்க: பொறம்போக்கு 2 டிக்கெட் குடு
அவன்: பண்ணாட.. யாருடா பொறம்போக்கு?

என்னை அறிந்தால்:
நீங்க: என்னை அறிந்தால் 2 டிக்கெட் குடு
அவன்: உன்னை தெரியாது. டிக்கெட் தர மாட்டேன்.

ஆரஞ்சுமிட்டாய்:
நீங்க: ரெண்டு ஆரஞ்சுமிட்டாய்  குடுங்க
அவன்: யோவ், இது என்ன பொட்டி கடையா, ஆரஞ்சுமிட்டாய்  குடுக்கறதுக்கு? .

டார்லிங்:
நீங்க: டார்லிங் டூ டிக்கெட்ஸ் ப்ளீஸ்?
அவன்: டேய் அவனா நீ? 

 புலி:
நீங்க: புலிக்கு ரெண்டு டிக்கெட்
அவன்: புலி எல்லாம் உள்ள விடறது இல்ல.

பிசாசு:
நீங்க (மனைவியுடன்): பிசாசு இருக்கா?
அவன்: அதான் கூடவே கூட்டிட்டு வந்து இருக்கியே

[பின் குறிப்பு: ஜோக்கா இருந்தா சிரி, வீக்கா இருந்தா விட்டுறு]

Tuesday, December 30, 2014

உடுக்கை கிழிந்தவன்

சின்ன வயசுல பள்ளி கூடத்துக்கு நானும் என் அண்ணனும் ஸ்கூல் பஸ் ல தான் போவோம். 
'இது என்ன பஸ் ஆ? இல்ல மீன் மார்க்கெட் ஆ' அப்பிடின்னு டிரைவர் அண்ணா திட்டற அளவுக்கு எப்பவும் ஒரே சத்தம்மா இருக்கும். அரட்டை, சண்டை, பாட்டுக்கு பாட்டு, தள்ளுமுள்ளு எல்லாம் நடக்கும். 

அன்னிக்கு ஒரு நாள்...அப்போ நான் நாலாவது படிச்சிக்கிட்டு இருந்தேன். 
.........@@@ @@.......
(சுருள் போட்டாச்சு இல்ல.. பிளாஷ்பேக் ஆரம்பம்). 

காலைல பஸ்ல போய்ட்டு இருந்தோம். லைட் பிரவுன் கலர்ல கோடு போட்ட சட்டை, அதே கலர்ல ட்ரௌசெர். 
டக் இன் பண்ணி ஷ்ஷு போட்டு வகிடு எடுத்து தலை வாரி.
வழக்கமான நாளா தான் ஆரம்பிச்சது. 
ஆனா அன்னிக்கு அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்ன்னு நா நெனச்சிக்கூட பார்த்து இருக்க மாட்டேன்.

பக்கத்துல உக்கார்ந்து இருந்த சரவணன் கூட சண்ட போட, தள்ளுமுள்ளு நடக்க, நா சீட்ல இருந்து கீழ விழ...
மாமா ட்ரௌசெர் கிழிஞ்சிச்சு. நெஜமாவே கிழிஞ்சிடுச்சு. 
"எண் ஏழு வடிவத்தில் கிடைக்கோடு (horizontal line) மூன்று சென்டிமீட்டர்  செங்குத்து (vertical) நான்கு சென்டிமீட்டர் அளவில்" கிழிஞ்சி உள்ள போட்டு இருந்த பச்சை ஜட்டி அப்பட்டமா தெரியற மாதிரி ஆய்டுச்சு. 

பஸ் விட்டு இறங்க பேக் மாட்டும் போது தான் சரவணன் சொன்னான். 
'டேய்.. ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா'. 
எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அண்ணன் முன்னாடியே அவன் நண்பர்கள் கூட இறங்கி போய்ட்டான். அண்ணன் போனா என்ன? மானம் காக்க நண்பன் இருக்கானே. சரவணன் ஐடியா குடுத்தான். 

'பேக் நல்லா லூஸா போடு.' 
'ட்ரௌசெர் மறையற அளவுக்கு லூஸ் பண்ணி மாட்டிக்கோ' 
'அப்பவும்  தெரியுதுடா' 
'சரி நீ முன்னாடி போ. நா உன் பின்னாடியே க்ளோஸா நடந்து வரேன்.' 

அப்படியே செஞ்சோம். எப்டியோ ஒரு வழியா தட்டுத்தடுமாறி கிளாஸ் ல வந்து ஒக்காந்தாச்சு.
சரவணன் சொன்னான்.
'என்ன ஆனாலும் சரி. இன்னிக்கு ஃபுல்லா நீ பெஞ்ச விட்டு எழுந்துக்காத' 
'டேய் லஞ்ச் டைம்ல க்ரௌண்டுக்கு போய் சாப்பிடணுமே டா'
'உனக்கு சோறு முக்கியமா? மானம் முக்கியமா?'

முடிவு செய்தேன். 
'இதோட சாயந்தரம் தான் எடத்த விட்டு எழுந்துக்கிறேன். எப்டி வந்தமோ அப்டியே போய் பஸ்ல ஒக்காந்திடனும்'
எடுத்த முடிவ வெற்றிகரமா செயல் படுத்தவும்முடிந்தது - ரெண்டாவது பீரியட் ஆரம்பிக்கும் வரை.

'Fifth standard B section கிளாஸ் யாருக்கு தெரியும்?' மிஸ் கேட்டாங்க.
'மிஸ். இவனுக்கு தெரியும் மிஸ். அது இவங்க அண்ணன் கிளாஸ்' முன்னாடி இருந்தவன் என்னை காட்டினான். 
'இங்க வாப்பா, இந்த நோட் எல்லாம் எடுத்துட்டு போய் அந்த கிளாஸ்ல வெச்சிட்டு வா'
போச்சுடா....... என்ன செய்யறதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன். 

'எனக்கு கிளாஸ் தெரியாது மிஸ்' 
'எனக்கு தெரியும் மிஸ். நா எடுத்துட்டு போறேன்' சரவணன் உதவினான்.
ஹப்பாடா.
'ஓகே.. ரெண்டு பேரும் வந்து எடுத்துட்டு போங்க.'
அய்யையோ.
'என்னடா ஒக்காந்துக்கிட்டே இருக்க? எழுந்து வா' மிஸ் அதட்டினாங்க.
இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? எழுந்து போனேன்.

நா ஒக்காந்திருந்த கடைசி பெஞ்சில இருந்து ரெண்டு வரிசை தாண்டறதுக்குள்ள என் பின்னாடி ஒரே சலசலப்பு. முதல் மூணு வரிசை கேர்ள்ஸ் வேற. 
போய் குனிந்து நோட்ஸ் எல்லாம் தூக்கினேன்.  'டேய் ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா ...டேய்.. டேய்' பின்னாடி இருந்து பசங்க கத்தறாங்க. நா காதுல வாங்கிக்காம நோட்ஸ் எல்லாம் தூக்கிகிட்டு நடந்தேன். 
கண்டிப்பா கேர்ள்ஸ், மிஸ் உட்பட மொத்த கிளாஸும் பார்த்து இருக்கும். கண்ணுல லைட்டா தண்ணி. 
வெளிய காட்டிக்காம எதுவும் காதுல வாங்கிக்காம யாரையும் பாக்காம கிளாஸ் விட்டு நடந்தேன். 
கூட சரவணன் கொஞ்சம் நோட்ஸ் தூக்கிட்டு வந்தான். இன்னும் யார்யார் எல்லாம் பாக்க போறாங்களோ? 

அண்ணன் கிளாஸ் ஸ்கூலோட இன்ணோரு கோடில இருக்கு.
சரவணன என் பின்னாடி நடந்து வர சொல்லிட்டு யோசிச்சிகிட்டே நடந்து போனேன். 
'சரவணா நா கிளாஸ் வெளியவே ஒளிஞ்சி நிக்கறேன். நீ போய் உன்னோட கைல இருக்கறத உள்ள வெச்சிட்டு வந்து என்னோடது வாங்கிட்டு போய் வெச்சிடு ஓகேவா?' 
'சரிடா. நீ இங்கயே இரு' 

சொன்னபடி செய்தான். நா அண்ணன் கிளாஸ் உள்ள போகவே இல்ல. 
மறுபடியும் ஹப்பாடா. 
சரவணன் வெளிய வந்து சொன்னான் 
'நல்ல வேலை எல்லாருக்கும் கிளாஸ் நடக்கறதுனால ஒரு பயலும் வெளிய இல்ல. இன்டர்வெல் டைம் ல வந்து இருந்தா கண்டிப்பா மாட்டி இருப்போம்' 
சொல்லி முடிக்கும் போதே இன்டர்வெல் பெல்அடித்தது.
மறுபடியும் அய்யையோ. 

நா அப்டியே சுவர் ஓரமா போய்  சாஞ்சிக்கிட்டேன். 
எல்லா கிளாஸ்ல இருந்தும் பசங்க எல்லாம் வெளிய வர ஆரம்பிச்சிட்டாங்க.
'என்னடா பண்றது?' 
'தெரியலையே' 
யோசிச்சோம். ஐடியா வந்தது.

'சரவணா. நாம எப்பவும் பஸ் விளையாட்டு விளையாடுவோமே?'
'ஆமா?'
'அதே மாதிரி நீ என்ன புடிச்சிக்கோ. நீ என் ட்ரௌசெர மறைச்ச மாதிரியும் இருக்கும். 
நாம வேகமாவும் இங்க இருந்து ஓடிடலாம்'
'சூப்பர் ஐடியா'

(பஸ் விளையாட்டு -- சிறார்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த விளையாட்டை ஆட இரண்டு நபர்கள் தேவை. முதல் நபர் பஸ் போன்று முன்னே நிற்க வேண்டும்.இரண்டாம் நபர் ஓட்டுனர் போன்று முதல் நம்பரின் பின்னால் நெருக்கமாக நின்று கொள்ள வேண்டும். இரண்டாம் நபர் முதல் நபரின் இரு கைகளையும் முழங்கைக்கு மேல பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிடித்துக்கொண்டு வலது கையை திருகினால் முடுக்கு (accelerator). இடது கையை அமுக்கினால் நிறுத்தம் (brake). தலை முடியை இழுத்தால் கியர். இரண்டாம் நபரின் இயக்கத்திற்கு ஏற்ப முதல் நபர் வாயால் 'டுர்ர்ர்ர்' என சத்தத்தை எழுப்பிக் கொண்டே ஓட வேண்டும்.) 

பஸ் விளையாட்டு வொர்க் ஆச்சு. கிளாஸ்ல வந்து ஒக்காந்தாச்சு. 
'ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா' ன்னு சொன்ன எல்லாருக்கும் 'தெரியும் டா' ன்னு ஒரு வரில பதில் சொல்லி முடிச்சிக்கிட்டேன். நல்ல வேலையா அதுக்கு மேல யாரும் கிண்டல் பண்ணல. 

ஒரு வழியா சாய்ந்தரம் வரைக்கும் சமாளிச்சிட்டேன். இனிமே பஸ் வர வரைக்கும் சமாளிச்சா போதும். 
ஆனா ஸ்கூல் முடிஞ்சு ஒரு மணி நேரம் கழிச்சி தான் பஸ் வரும்.
வழக்கமா அது வரைக்கும் நான் என் நண்பர்கள் என் அண்ணன் அவன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கிரௌண்டுக்கு போய் விளையாடுவோம். அன்னிக்கு நா வரல ன்னு சொல்லிட்டேன். 

அண்ணன் வந்து கேட்டான். simple conversation. ஆனா வாழ்க்கைக்கும் மறக்க மாட்டேன்.

'என்னடா?'
'ட்ரௌசெர் கிழிஞ்சிடுச்சுடா' காமிச்சேன். 
'அப்பறம் ஏன் டக் இன் பண்ணி இருக்க? ஷர்ட் எடுத்து வெளிய விட்டு கவர் பண்ண வேண்டியது தானே?'

அடச்ச்ச்ச்சய்ய்ய்ய். 
காலைல இருந்து இது எனக்கு தோணலயே. 

சட்டைய எடுத்து வெளிய விட்டுட்டு விளையாட போயிட்டேன். 

Thursday, October 23, 2014

கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சி

முன்னெல்லாம் 'இந்தியர், தமிழர் ன்னு சொல்லிக்க வெட்கப்படறாங்களே' ன்னு நிறைய கவலைப்படுவேன். ஆனா சமீப காலங்கள்ல ரொம்ப ஓவரா பெருமைப்பட்டுக்குறோமோ  ன்னு தோணுது. ஈமெயில் ல கண்டு பிடிச்சது தமிழன், மைக்ரோசாப்ட் CEO  இந்தியன் ன்னு ஆரம்பிச்சி, பொண்ணுங்க ஏன் பொட்டு  வைக்கறாங்க, மாடு ஏன் அம்மா ன்னு கத்துது ன்னு போய் இப்போ லேட்டஸ்ட்டா கமலஹாசன் எபோலா வரும் ன்னு அந்த காலத்துலேயே சொன்னாருன்ற  வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க.

இந்த மாதிரி எல்லாத்தையும் இந்தியர்கள் தான் கண்டு புடிக்கறாங்க ன்னு முன்னாடியே தெரிஞ்சி தான் 2012 ஹாலிவுட் படத்துல உலகம் அழிய போகுது ன்னு இந்தியன் தான் பர்ஸ்ட் கண்டுபிடிக்கறான் ன்னு காட்டி இருக்காங்க. (அயய்யோ நானும் மாறிட்டேனே) 

நண்பர் ஒருத்தர் இது ரிலேட்டடா பேசும் போது டய்மிங்க்கா ஒரு கதைய ஞாபகப்படுத்தினார். ஏற்கனவே தெரிஞ்சாலும் பெட்டி செய்தியா அது இதோ. 
சைனாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள copper wire  பதிஞ்சி இருந்தத கண்டு பிடிச்சானாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்க டெலிபோன் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'.
ரஷ்யாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள fiber  optic cable பதிஞ்சி இருந்ததாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்கஇன்டர்நெட் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'. இந்தியன் பார்த்தான். ஊருக்கு போய்  அவனும் நிலத்த தோண்டினான். எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு காட்டினான். 'என்னயா? ஒண்ணுமே இல்லையே' ன்னு விஞ்ஞானிகள் கேட்டாங்க. இந்தியன் 'பாத்திங்களா, ஒரு wire-ம் இல்ல. அந்த காலத்துலேயே நாங்க wireless communication வெச்சி இருந்தோம்' ன்னு சொன்னானாம் 
'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்துல மதன் சொல்றாரு 'கூட்டுப்ரார்த்தனை, நெற்றிக்கண் ' எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. விஞ்ஞானிகள்  இப்போ தான் கண்டுபிடிக்கறாங்க ஆனா நாம ரொம்ப வருஷமா இத தெரிஞ்சி வெச்சி இருக்கோம்' ன்னு. இந்த மாதிரி விஷயங்கள்ல ஒரு pattern இருக்கு. அதாவது நாம ஒரு விஷயம் எதுக்கு பண்றோம்ன்னு தெரியாம பரம்பர பரம்பரையா செஞ்சிக்கிட்டு வருவோம். வெள்ளகாரன் தான் நமக்கு கண்டு புடிச்சி சொல்லுவான் 'தமிழன்  இத முன்னாடியே தெரிஞ்சி வெச்சி இருக்கான்' ன்னு. நமக்கும் அப்போ தான் தெரிய வரும். இருந்தாலும் காலர தூக்கி விட்டுக்குவோம். இதுக்கும் ஒரு (தெரிஞ்ச) கதை சொல்றேன். 

பலநூறு வருஷங்கள் முன்னாடி, முனிவர் ஒருத்தர் குருக்குலத்துல பாடம் சொல்லி  கொடுத்தாராம். அங்க ஒரு பூனை சுத்திக்கிட்டே இருந்துச்சாம். பசங்களுக்கு கவனம் சிதறுதே ன்னு அத அங்க இருக்க ஒரு தூண்ல கட்டி போட சொன்னாராம். 'இனிமே தினமும் நா படம் நடத்தும் போது  இந்த பூனைய கட்டி போட்டுங்க' ன்னு சொன்னாராம். சிஷயர்கள் இத ரொம்ப நாளைக்கு பின்பற்றி இருக்காங்க. அந்த முனிவர் இறந்து போய் அவரோட தலைமை சிஷ்யர் ஒருத்தர் குரு ஆனாராம். அடுத்த நாள் அவர் பாடம் நடத்த வரும்போது அங்க சுத்திக்கிட்டு இருந்த பூனைய காணோம். புது குரு பதட்டம் ஆயிட்டார். 'சிஷயர்களே, உடனே போய் ஒரு பூனைய புடிச்சிக்கிட்டு வாங்க. அத தூண்ல கட்டாம பாடம் எடுக்க கூடாது ன்னு உங்களுக்கு தெரியாது?' ன்னு சத்தம் போட்டாராம். 
அந்த கதையோட extension . (படம் முடிஞ்சி டைட்டில் போட்டு முடிச்சதும் ஒரு சீன் இருக்குமே அது மாதிரி). இப்படியே ரொம்ப வருஷம் ஏன் பண்றோம் ன்னு தெரியாம இந்தியர்கள் பூனையை கட்டிப்போட்டுபாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க. பல நூற்றாண்டுகள் கழிச்சி விஞ்ஞானிகள்  'பூனைய பக்கத்துல வெச்சிக்கிட்டு படிச்சா பர்ஸ்ட் ரேங்க் எடுக்கலாம். இத தான் இந்தியர்கள் பல நூறு வருஷங்கள் முன்னாடில இருந்து செஞ்சிக்கிட்டு இருக்காங்க' ன்னு கண்டு பிடிக்கறாங்க. உடனே நம்ப பசங்க 'நாங்க எல்லாம் அப்போவே அப்பிடி..ஆஹ்ங்' ன்னு பேஸ்புக் ல போட்டுக்கறாங்க.   

'சரி நைனா இப்போ இன்னா தான் சொல்ற ?'

என்ன சொல்றேன்னா 
ஒன்னு) நம்ப குருட்டுத்தனமா ஃப்பாலோ பண்ற பல விஷயங்கள ஏன் பண்றோம் ன்னு தெரிஞ்சி வெச்சிக்கணும். 'ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான். மீதி தமிழன் அடிமைகள் ஆனான்' ன்னு பில்லா படத்துல அஜித் சொல்லி இருக்காரு. சோ ஆதி தமிழன்/இந்தியன் பண்ணதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரிஞ்சிக்கணும்.
ரெண்டு) புதுசு புதுசா க்ரியேடிவ்வா நிறைய கண்டு பிடிக்கணும்.

இவளோ பெரிய பழைய நாகரிகத்த வெச்சி இருக்க நாம இன்னும் நிறைய கண்டு புடிச்சி இருக்கலாம். ஆதி தமிழன்/இந்தியன் நிறைய கண்டு புடிச்சி தான் இருக்கான். நடுவுல தான் 'உணவே மருந்து மருந்தே உணவு', 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' ன்னு நம்ம கான்சென்ட்றேஷன் எல்லாம் சாப்பாட்ல போய்டுச்சு ன்னு நெனைக்கறேன். 

எல்லாம் ஒரு வேலை கல்வி முறை மாறினதுனாலயோ? ஒழுங்கா குருக்குல கல்வி இருந்திருக்கலாம். புதன் கிரகத்துக்கு ராக்கெட் விட சொல்லி குடுத்த நம்ப கல்வி, புலி முன்னாடி பதினைஞ்சு  நிமிஷமா ஒக்காந்திருந்தும் எப்படி உயிர் பிழைக்கறதுன்னு சொல்லி தரலையே. 

'இவளோ சொல்றியே நீ என்னடா பண்ண' ன்னு கேக்குறீங்களா?' அவளோ அறிவு இருந்தா நா ஏங்க  இங்க வெட்டியா பேசிக்கிட்டு இருக்கப் போறேன்.

பி.கு. இத படிச்சிட்டு நா தமிழன இழிவு படுத்தறேன் ன்னு நெனைக்காதீங்க. தமிழன் ன்ற பெருமை எப்பவுமே உண்டு. ஆனா கர்வம் கெடையாது. "நா தியாகி இல்ல..அதே சமயத்துல துரோகியும் இல்ல" (மாப்ள எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? )

Tuesday, October 14, 2014

திருட்டுக் குட்டி

என் பொண்ணு பண்ற லொள்ளுத்தனங்கள இந்த ஊர் உலகத்துக்கு தெரிய படுத்தனும்னு ரொம்ப நாளா  நெனச்சிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் நேரம் வந்து இருக்கு. வீட்டுக்கு வரவங்க எல்லாம் 'இந்த நல்ல புள்ளைய பத்தி complaint  பண்றியே ' ன்னு  என்னை கேக்கறாங்க. அவ பண்ற லொள்ளுங்கள இனி இங்க போட்டுகிட்டே வர  போறேன்.

லொள்ளு நம்பர் 1:
அவ தமிழ் கிளாஸ் ல பாட்டு சொல்லி கொடுத்து இருக்காங்க.
"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்"

அவளுக்கு அது சரியா சொல்ல வரல. சரி நாம அத அவளுக்கு புரிய வெச்சோம்னா  அவளுக்கு சொல்றதுக்கு ஈஸியா இருக்குமேன்னு கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து 'pot  ல plant  இருக்கும். தண்ணி நா வாட்டர். பூ ன்னா  flower.. தண்ணி ஊத்தினா பூ பூக்கும்' ன்னு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். ஆனா நம்ப பசங்க தான் நாம சொல்றத கேக்கறதே இல்லையே.

'நோ அப்பா. அப்டி இல்ல. நா சொல்றேன் கேளு. தண்ணி நா வாட்டர். poopoo  ன்னா  (from  'poo poo'த்துச்சாம்) poopoo. ஒன்  தண்ணி குடிச்சா  ஒன் poopoo வரும். டூ தண்ணி குடிச்சா டூ poopoo  வரும். '

சிரிச்சி சிரிச்சி எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு.

லொள்ளு நம்பர் 2:
வீட்டுக்கு வந்திருந்த இன்னொரு குழந்தை கூட இவ டாய்  ஷேர் பண்ணல. ஒரே அடம். கடைசியா இவ கிட்ட இருந்து வாங்கி அந்த குழந்தை கிட்ட குடுத்துட்டோம். இவ கோவிச்சிக்கிட்டு ரூம் விட்டு போய் சோபா ல படுத்துக்கிட்டு ஒரே அழுகை. நல்ல விதமா சொன்னா புரிஞ்சிக்குவா ன்னு போய் விளக்கம் குடுத்தேன். 'அவ சின்ன கொழந்தை. நீ தான் பெரிய பொண்ணு. நீ தான் விட்டுக்கொடுக்கணும். நீ இப்போ டாய் ஷேர் பண்ணா தான் அவங்க வீட்டுக்கு போகும்போது அவ டாய் உனக்கு ஷேர் பண்ணுவா. எல்லாரும் உன்ன குட் கேர்ள் ன்னு சொல்லுவாங்க' ன்னு ஒரு பத்து  நிமிஷம் பேசினேன். நா சொல்றத எல்லாம் லைட்டா அழுதுக்கிட்டே உம் கொட்டி கேட்டுட்டு இருந்தா. நா எல்லாம் சொல்லி முடிச்சு 'ஒக்கே வா' ன்னு கேட்டேன்.
'அப்பா நீ இப்போ நல்லா சொன்னியே..(ஒருநொடி பெருமை பீலிங்க் எனக்கு)..... திருப்பி சொல்லு (பெருமை பீலிங்க் புஸ்ஸுன்னு போய்டுச்சு)'

லொள்ளு நம்பர் 3:

கவின்-உம் தியா-வும் சேர்ந்துட்டா யாராலயும் எதுவும் பண்ண முடியாது. ரெண்டு பேரும் பாசமா இருப்பாங்க. அதே நேரத்துல சண்டையும்  போட்டுக்குவாங்க. எல்லாமே போட்டி தான். 'I  win ' 'I can jump higher' ன்னு எல்லாமே competition. ஓடிக்கிட்டே இருப்பாங்க. புடிச்சி வைக்க முடியாது. மிரட்டினாலும் மதிக்க மாட்டாங்க  ஒரே பயம் 'போலீஸ்'

ஷாப்பிங் மால் போனோம் போன வாரம். அங்க இருந்த சோபா ல ஒக்காந்து வெயிட் பண்ணிட்டு இருந்தோம். வழக்கம் போல தியாவும் கவினும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. அங்க நடந்து போறவங்களுக்கு ஒரே disturbance. நானும் ரெண்டு மூணு தடவ சொல்லி பாத்துட்டேன். அடங்கவே இல்ல. போலீஸ்க்கு கால் பண்ணிடுவேன் ன்னு போன் எடுத்து காட்டினேன். பயந்து போய்  அமைதியா ஒக்காந்துட்டாங்க  கொஞ்ச நேரம் தான். மறுபடியும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. எவ்வளோ நேரம் தான் நா போலீஸ்க்கு கால் பண்ற மாதிரி நடிக்கறது?  சுத்தி சுத்தி பாத்ததுல ஒரு கடைக்கு மேல ஒரு கேமரா இருந்தது. ஐடியா!

ரெண்டு பேரையும் கூப்பிட்டு 'நா போலீஸ்க்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அதோ ஒரு கேமரா இருக்கு பாருங்க. அவங்க அங்க இருந்து உங்கள வாட்ச் பண்ணிடே இருக்காங்க. நா கை அசைச்சா போதும். உங்கள வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. ஒழுங்கா போய் உக்காருங்க.' ன்னு சொல்லிட்டேன். ரெண்டு பெரும் அமைதியா போய்  சோபா ல ஒக்காந்துக்கிட்டாங்க.

கொஞ்ச நேரம் ஒழுங்கா தான் இருந்தாங்க. அப்பறம் தியா நைசா சோபா ல இருந்து இறங்கி போனா. நா சைலண்ட்டா பாத்துக்கிட்டே இருந்தேன். அங்க இருந்த advertisement board  பின்னாடி போய் நின்னுக்கிட்டு 'கவின் கவின் கம் ஹியர்' ன்னு whispering  வாய்ஸ் ல கூப்பிட்டா. அவன் அப்பாவியா எழுந்து போனான். போர்ட்ல ஏதோ அவனுக்கு காமிக்கற மாதிரி காட்டிட்டு அவன் அத பாத்துகிட்டு இருக்கும் போது  குடுகுடு ன்னு என்கிட்ட ஓடி வந்து 'அப்பா அப்பா கவின் அங்க நிக்கறான். சீக்கிரம் போலீஸ்க்கு கால் பண்ணு' ன்னு சொல்லிட்டு கடை மேல இருந்த கேமரா பாத்து கை அசைச்சு கூப்பிட ஆரம்பிச்சிட்டா.

லொள்ளு நம்பர் 4:
இது அவ தொணதொணன்னு கேள்வி கேக்கற ஸ்டேஜ் போல. ஏன் ஏன் ஏன் ன்னு நச்சரிச்சிக்கிட்டே இருப்பா. நான் ஓரளவுக்கு அவளுக்கு எல்லாம் பதில் சொல்லிடுவேன். ஆனா விடாம ஏன் ன்னு கேட்டுட்டே இருப்பா.

'ஏன் humans எல்லாம் ரெண்டு கால்ல நடக்குறாங்க? animals எல்லாம் நாலு கால்ல நடக்குறாங்க?' ன்னு கேட்டா. சரி நாம புத்திசாலி தனமா இப்போவே evolution  பத்தி சொல்லி தரலாம் ன்னு 'Monkeys ல இருந்து humans  வந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா நாலு கால்ல இருந்து ரெண்டு கால்ல நடக்க கத்துகிட்டாங்க' ன்னு சொன்னேன். 'ஏன் monkeys  மட்டும் humans ஆனாங்க? ஏன் மத்த animals  ஆகல?' நா என்னத்த சொல்லுவேன்? 'அது அப்படி தான். God  வந்து இந்த world  create  பண்ணும்போது அப்படி தான் பண்ணாரு' ன்னு சொல்லிட்டு அடுத்து அவ God  நா யாரு ன்னு கேட்பாளே என்ன சொல்றது ன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதிசயமா அவ அமைதி ஆய்ட்டா.

நம்ம வாய் தான் சும்மா இருக்காதே. 'God நா யாரு தெரியுமா?' ன்னு கேட்டேன். 'ஓ தெரியமே' ன்னு சொல்லிட்டா. (எங்க வீட்ல சாமி எல்லாம் இருக்கு. பட் அவளுக்கு சாமி ன்னு ஒரு toy  மாதிரி தான் தெரியும். God  ன்னு english ல தெரியாது ன்னு நெனச்சிட்டு இருந்தேன்)

'சரி God ன்னா  யாரு?'
'ரெட் ட்ரெஸ் போட்டு இருப்பாங்களே'
'(ஆதி பராசக்தி யா) சரி ஓரளவுக்கு ரைட்டு'
'fight  பண்ணுவாங்களே'
'(evil  fight  பண்றத சொல்றாளோ) அப்பறம்?'
'கைல long  spear  வெச்சி இருப்பாங்களே'
'(வேல் வெச்சி இருக்கறத சொல்றாளே. இது சாதாரண கொழந்தை இல்ல. தெய்வ கொழந்தை ன்னு நெனச்சிகிட்டு  புல்லரிச்சிகிட்டே இருக்கும் போது அடுத்து சொன்னா
'Princess  Sofia  ல வருவாங்களே'
இப்போ நா confuse  ஆய்ட்டேன். Sofia the first கார்ட்டூன் நானும் தான் பாக்கறேன்.அதுல எங்க God  வருது?
'அதுல எங்க வராங்க?'
'வருவாங்க, Princess Ivy கூட'

அப்போ தான்  ஸ்டரைக் ஆச்சு.
'அம்மு, நா சொல்றது God . நீ சொல்றது Gaurd' ஒரு நிமிஷம் என்னோட கற்பனைய  நெனச்சி சிரிச்சிக்கிட்டேன் .

லொள்ளு நம்பர் 5:
'அப்பா. என் கூட விளையாடாத. தாடி குத்துது'
'மறுபடியுமா? இப்போ தானே ஷேவ் பண்ணேன்'
'திரும்ப திரும்ப திரும்ப வந்துட்டே இருக்கு'
'சரி, தாடி ஏன் முளைக்குது?'
'அது .. அது நேத்து நீ ஆபீஸ் போன. அப்போ கார்ல போகும் போது  குடை எடுத்துட்டு போகல'
'சோ?'
'மழை பெய்ஞ்சுதா... அப்போ டிராப்ஸ் எல்லாம் உன் கன்னத்துல பட்டுடுச்சு.. அதான் தாடி வந்துடுச்சு.'

தண்ணி ஊத்தி வளர்க்க அது என்ன மரமா? 

லொள்ளு நம்பர் 6:
தியா-விற்கு அவளோட ஹேர் ஸ்டைல் மேல ஒரு இது.
ஆத்திச்சுடி சீரீஸ்  ஸ்டோரீஸ் பாப்போம் யூடியுப் ல.
ஒவ்வொரு ஆத்திச்சுடி க்கும் ஒரு ஸ்டோரி வரும். 'ஆறுவது சினம்' ஸ்டோரில ஒரு பையன் கோவத்துல கைல இருக்க ரிமோட்ட  தூக்கி போட்டுடுவான். அவங்க அம்மா அவன் தலைமுடிய புடிச்சி ஸ்கேலால அடிப்பாங்க. (அதுக்கு அந்த பையன் கோச்சிக்கிட்டு சாப்பிடாம ஸ்கூல் போய் அங்க மயக்கம் போட்டுடுவான். அப்ப ஒரு நல்ல பொண்ணு சாப்பாடு குடுத்து 'கோவபடாத.ஆறுவது சினம்' ன்னு சொல்லும்)

தியா சின்ன வயசுல சிலசமயம் அப்படி தூக்கி போடறது உண்டு. நா இத பாத்ததும் 'பாத்தியா? கைல இருக்கறத தூக்கி போட்ட? அப்பறம் அதே மாதிரி உன் தலைய புடிச்சி ஸ்கேல் எடுத்துட்டு வந்து டொப் டொப்  ன்னு அடி குடுப்பேன்.' ன்னு சொன்னேன்.

இமிடியட் ரிப்லை. "அப்பா அந்த மாதிரி நா பண்ணா, நீ அடிக்கணும்னா என்ன கூப்பிடு. முடிய  புடிக்க வேண்டாம். நானே வந்து அடி வாங்கிக்கறேன்."

(இன்னும் பெரிசாகி என்ன சொல்ல போகுதோ)

லொள்ளு நம்பர் 7:
தியா படிக்கற தமிழ்ப்பள்ளில annual day . தியா மூன்று பரிசுகள் வாங்கி அசத்திட்டா . நா வாலண்டீயர். என்னால முடிந்த உதவிகள் செய்வேன். பசங்க வரவர பரிசுகள் எடுத்து தரத்தும், அவங்கள ஒழுங்கா ஸ்டேஜ் விட்டு எறங்க வைக்கறதும் என்னை  பண்ண சொன்னாங்க. நா பரிசு எடுத்து கொடுக்கற ஒவ்வொரு டைம்-உம தியா ஸ்டேஜ் கீழ கிட்ட நின்னுக்கிட்டு எனக்கு cheer up  பண்றா. "Daddy ..daddy ... go  daddy.. yei" அப்டின்னு கத்தி கத்தி என்ன வெட்கத்தில் நெளிய வெச்சிட்டா. சோ ஸ்வீட். 


--------------------------------------------------------------------------------------------------------------
என் மகளுக்கு பிரியாணி ன்னா அவ்ளோ புடிக்கும். மூணு வயசுக்குள்ள பிரியாணி கூட அவ பண்ண ரவுசுகள சொல்றேன்.

1) ஹோட்டல பிரியாணி ஆர்டர் பண்ணி அது டேபிள்க்கு வரும்போதே 'ஹேய்...பிரியாணி.. பிரியாணி' ன்னு சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சிடுவா.
2) சூடா வர பிரியாணில ஆவி பறக்கும்மில்ல? அத தொட்டு கண்ல ஒத்திக்குவா (தீபாரதனை மாதிரி)
3) ப்ளேட்ல வெச்சத சாப்பிட முடியாம கொஞ்சம் வெச்சிட்டா கெளம்பும்போது சோகமா 'bye பிரியாணி' ன்னு தட்டுக்கு டாட்டா காட்டிட்டு தான் வருவா. 



திருட்டுக் குட்டி