Tuesday, May 10, 2016

வலைப்பக்கத்தின் பயணம் - ஒரு எளிய அறிமுகம்

நாம கம்ப்யூட்டர்ல இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர்-லையோ கூகிள் க்ரோம்-லையோ  www.google.com ன்னு  தேடும்போது நிலத்துக்கு அடியில (அதான், undergroundல) என்ன நடக்குது?  புரியற மாதிரி குட்டி கற்பனை.

கூகிள் ஒரு கடை ன்னு வெச்சிக்கோங்க. அதான் SERVER  நீங்க CLIENT உங்களுக்கு அந்த கடைல இருந்து சாமான் வாங்கணும். உங்க பையன் BROWSER கிட்ட சொல்றீங்க. (ஏன் டவுசெர் ன்னு  பேர் வைக்க வேண்டியது தானே ன்னு கேக்க கூடாது) 


1) 'டேய் BROWSER, கொஞ்சம் இந்த கடைக்கு போய்ட்டு வாடா' ன்னு WWW .GOOGLE.COM ங்கற கடை பேர (URL) சொல்றீங்க


உங்க பையனுக்கு கடை பேர் சொன்னால்லாம் தெரியாது.  அட்ரஸ் தெரிஞ்சா தான் போவான்.


3)  மொதல்ல பையன் ' ஏற்கனவே இந்த கடைக்கு போய் இருக்கோமா? நமக்கு ஆல்ரெடி இந்த URL லோட அட்ரெஸ் தெரியுமா' ன்னு மனசு(BROWSER CACHE)க்குள்ள யோசிப்பான். 'ஏற்கனவே போய் இருக்கான். அட்ரஸ் தெரியும்' ன்னா கெளம்ப ரெடியாயிடுவான். தெரியலயா? எதிர்த்த வீட்டுக்கு போய்  DNS அக்கா கிட்ட கேப்பான். 


4) DNS அக்காவுக்கு ஊர்ல உள்ள எல்லா கடை அட்ரஸும் அத்துபடி. அவங்க URL ல பாத்துட்டு 'இந்தா டா அட்ரஸு, பாத்து போய்ட்டு வா' ன்னு  . 139.130.4.5 ங்கற  மாதிரி அட்ரஸ் (IP ADDRESS)  குடுப்பாங்க.


5) பையன் உங்க கிட்ட 'அப்பா அட்ரஸ் தெரிஞ்சிடுச்சு. என்ன வாங்கணும் ன்னு லிஸ்ட் குடுங்க' ன்னு கேக்கறான்.  நீங்க HTTP REQUEST ங்கற  லிஸ்ட்  குடுக்குறீங்க. 


லிஸ்ட்ல a) நீங்க யாரு, உங்க பையன் ப்ரௌசெர் யாரு அப்டிங்கற METADATA,   b) நீங்க என்ன மொழி (PREFERRED LANGUAGE) ல பேசுவீங்க,  c) போன தடவ கூகிள் அண்ணாச்சி ஜாமா குடுத்தப்ப 'அடுத்த தரம் வரும்போது இந்த இன்பர்மேஷனையும் சேத்து குடுங்க, ஒத்தாசையா இருக்கும் (உதாரணம்: கிரெடிட் கார்டு நம்பர், பாஸ்வேர்ட்) ' ன்னு விட்டுட்டு போன COOKIES (ங்க கம்ப்யூட்டர் ல ஒரு FILE  தான்)  எல்லாம் இருக்கும்


6) இந்த HTTP REQUEST-அ எடுத்துகிட்டுBROWSER கெளம்புவான்.  (TCP CONNECTIONதான் ரோடு. அத ஓபன் பண்ணுவான். நேரா IP address க்கு போவான்.


நீங்க சாமான் வாங்கறதால இந்த request  பேரு "HTTP/GET" request. நீங்க சாமான் (போடோஸ் மாதிரி) குடுத்து அனுப்பிச்சா "HTTP/POST" request


7) கூகிள் அண்ணாச்சி உங்க லிஸ்ட  வாங்குவாரு.. நீங்க அனுப்பிச்ச METADATA , COOKIES எல்லாம் பாப்பாரு. கடைல செக்யூரிட்டி ஜாஸ்தியா இருந்தா 'நீ யாரு, பாஸ்வேர்ட் என்னனு எல்லாம் பாப்பாரு'... பாத்துட்டு 'அட நம்ப சுப்பிரமணி பையனா நீ? மொதல்லையே சொல்ல கூடாதாப்பா?'  ன்னு request  அ  வாங்கி வச்சிக்கிட்டு response  ங்கற சாமான ரெடி பண்ண ஆரம்பிப்பார். 


Response  ல என்ன இருக்கும்ன்னா a)  'தங்கள் கடிதம் கிடைத்தது'ன்ற மாதிரி ஒரு ஸ்டேடஸ் கோட் (200 ன்னா எல்லாம் ஓகே ன்னு அர்த்தம். 404 ன்னா நீங்க கேட்டது இல்ல ன்னு அர்த்தம்), b) நீங்க கேட்ட  HTML BODY 


8) உங்க பையன் இதெல்லாம் எடுத்துகிட்டு திரும்ப TCP CONNECTION ரோட்ல வந்து வீடு சேருவான். வீடு வந்ததும் ரோட க்ளோஸ் பண்ணிடுவான் இல்ல அடுத்து யாரவது போரங்கன்னா தெறந்தே விட்டுடுவான். 


9) வீட்டுக்கு (உங்க கம்ப்யூட்டர்)  வந்ததும் சாமான எல்லாம் ஒழுங்கா எடுத்து வைக்கணுமில்ல. வந்த சாமான் HTML ஆ? போட்டோ வா? பாட்டா? ன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி எடுத்து வைப்பான்.  HTML  ஆ இருந்தா அத அழகழகா கலர் கலரா காட்றதுக்கு css file , javascript file  எல்லாம் யூஸ் ஆகும். சில சமயம், இந்த file  எல்லாம் வேற கடைல இருக்கும். மறுபடியும் உங்க பையன் கடைக்கு கெளம்பி போக வேண்டி இருக்கும். 


10) கடைசில நீங்க வந்த பொருள உங்க திரைல பாப்பீங்க. 


இது தாங்க நடக்குது... மேலோட்டமா சொல்லி இருக்கேன். 


இப்போ உங்க பையன் கிட்ட அண்ணாச்சி request  வாங்கினதும், அவர் கடைல இருக்க IIS ங்கற குமாஸ்த்தா என்னன்ன பண்றார் ன்னு இன்னும் விலாவரியா பாக்கலாம். 


அருஞ்சொற்பொருள் 

URL - Uniform Resource Locator (http://www.webopedia.com/TERM/U/URL.html) 
DNS  - Domain Name Servers (http://www.networksolutions.com/support/what-is-a-domain-name-server-dns-and-how-does-it-work/)
TCP - Transmission Control Protocol (http://www.webopedia.com/TERM/T/TCP.html)
HTTP - HyperText Transfer Protocol (http://www.webopedia.com/TERM/H/HTTP.html) 
HTML - HyperText Markup Language 

Sunday, February 14, 2016

இருளின் நிழல் - நிழல் 3

டாக்டரின்  சைக்கியாற்றிஸ்ட் நண்பரைப் பார்க்க அவரது வரவேற்பறையில் காத்திருந்தார்கள் ராஜேஷும் டாக்டரும். மாடி ஏறி வந்ததில் மூச்சிரைத்தது ராஜேஷ்க்கு. அப்பா வயதை ஒத்திருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பத்தின் அடையாளமாக சீரான மூச்சு டாக்டர் க்கு. 

"டாக்டர் ஒரு ஹெல்ப்" ராஜேஷ் பேசினான். 
"சொல்லுப்பா"
"உங்க ப்ரெண்ட் கிட்ட நடந்தது இந்த கொலை, கேஸ், நா சஸ்பெக்ட் ன்னு எந்த விஷயமும் தெரிய வேண்டாமே" 
"இல்ல ராஜேஷ். ஆஸ் எ டாக்டர் சொல்றேன். எல்லாத்தையும் சொல்றது தான் நல்லது. அவர் யார் கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டார். என்ன நம்பு."
ராஜேஷ் மெளனமாக தலை அசைத்தான். 

சைக்கியாற்றிஸ்ட் வரவேற்பறைக்கே வந்து டாக்டரின் கைக்குலுக்கினார். டாக்டர் ராஜேஷை அரைகுறையாய் அறிமுகபடுத்தி விஷயம் சொல்லி உதவி கேட்டார். ராஜேஷை மட்டும் உள்ளே அழைத்து சென்றார் சைக்கியாற்றிஸ்ட் நண்பர். 

'ஒண்ணும் பயப்படாதீங்க ராஜேஷ். இது பெரிய ப்ரோசீஜர் இல்ல. ஒரு விதமான டெக்னிக் அவளோ தான். ஹிப்னோடிசம் மாதிரி' சைக்கியாற்றிஸ்ட்  தைரியம் சொன்னார்.
அவர் காட்டிய சோபாவில் படுத்தான் ராஜேஷ். 'ராஜேஷ்..இப்ப நம்ம பண்ணபோறது  பேரு Velvety-Smooth Breathing. நிதானமான மூச்சு. அது மேல மட்டும் தான் கவனம் இருக்கனும். ப்ரீத் இன் அண்ட் ப்ரீத் அவுட். பத்து நிமிஷம் பண்ண போறோம். அப்பறம்  உங்களோட இன்சிடெண்ட நடந்தது நடந்தபடி அப்படியே சொல்லுங்க. நீங்க பார்த்தவங்க மட்டும் இல்லாம அவங்க நிறம், சுத்தி இருந்த திங்க்ஸ், அங்க இருந்த டெம்பெரேச்சர், வாசனை எல்லாத்தையும் ஞாபகத்துக்கு கொண்டு வாங்க. எதாவது மறந்தாலும் தயங்காம மனசுல முதல்ல தோன்றத சொல்லுங்க.'

ராஜேஷ் முயற்சித்தான். ஒன்றுவிடாமல் வரிசையாக அன்று நடந்ததை சொன்னான். தேவை படும்போது சைக்கியாற்றிஸ்ட்  மேலும் மேலும் கேள்வி கேட்டு அவன் ஞாபகத்தை தூண்டினார். அவரது யுக்தி வேலை செய்தது. மேலும் மேலும் நுணுக்கமாக கேள்வி கேட்டார். ராஜேஷை யோசிக்க விடாமல் பேச வைத்தார். இறுதியாக ராஜேஷின் மனதில் இருப்பது தங்குதடையில்லாமல் வெளியே வந்தது. இது தான் சரியான நேரம் என்று சைக்கியாற்றிஸ்ட் கடைசி கேள்வியை கேட்டார். "அந்த கிரீடிங் கார்டில் என்ன தெரிந்தது?" கேட்டவுடன் பதில் வந்தது ராஜேஷிடமிருந்து.

சைக்கியாற்றிஸ்டிடம் விடை பெற்று கிளம்பினார்கள் ராஜேஷும் டாக்டரும்.

"என்ன ராஜேஷ். கேள்விக்கு பதில் கெடச்சிதா?" டாக்டர் கேட்டார் 
"ஹும்."
"வெரி  குட். என்னன்னு சொல்லலாமா என்கிட்ட?"
"Go to 13th floor... இது தான் டாக்டர் நா அந்த கிரீடிங் கார்டில பாத்தது."
"தட்ஸ் எ குட் லீட். உன் ஆபீஸ்ல 13th  ப்ளோர் போய் விசாரி. எதாவது தெரியுதா ன்னு பாப்போம்."
ராஜேஷ் மௌனமாய் இருந்தான்.
" என்ன ராஜேஷ். சம்திங் ராங்?"
"எங்க ஆபீஸ் ல 12 floors தான் டாக்டர். 13th ப்ளோரே இல்ல."


Tuesday, December 29, 2015

இருளின் நிழல் - நிழல் 2

ஆம்புலன்ஸ் வந்திருந்தது. தரையில் வெறும் ரத்தம் மட்டுமே இருந்தது. உடல் இல்லை. ஒன்றும் புரியாமல் முழித்த  ராஜேஷை சரமாரியாக கேள்வி கேட்டார்கள். என்னவென்று சொல்வது? உண்மையை சொல்லுவதை தவிர வேறு வழியே இல்லை ராஜேஷ்க்கு.

நடந்ததை நேரில் பார்த்த அதிர்ச்சி, எப்படி சொல்வது என்று தெரியாத குழப்பம் இரண்டும் சேர்ந்து அவன் வாய் குழறியது. உள்ளது உள்ளபடி சொன்னான். திரும்பத் திரும்ப சொன்னான். நீல நெருப்பு உடலை விழுங்கியது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? போலீஸ் அவனை ஸ்டேஷனில் விசாரிக்க அழைத்து சென்றது. கோர்ட் காவலில் வைத்தார்கள். மருத்துவ பரிசோதனை செய்தார்கள். லை டிடெக்டர் சோதனையும் செய்தாயிற்று. பாடியே இல்லாத நிலையில் போலீஸ் வேறு என்ன தான் செய்யும். ராஜேஷ் ஜாமீனில் வெளியே வந்தான்.

ஆபீஸ் சென்று ஒரு மாதம் ஆனது. வீட்டில் அளிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான கவனிப்பு அவனுக்கு பிடிக்கவில்லை. யாரும் தான் சொன்னதை நம்பவில்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அன்று அவன் நெருப்பின் நடுவே பார்த்தது என்ன என்று அவனால் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. மனநிம்மதி இழந்து இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று யோசித்தான். அப்போது தான் அவனது குடும்ப நண்பரான டாக்டரின் நினைவு வந்தது. அப்பாவின் இளம்வயது சிநேகிதர். கிரீன் கார்டு ஹோல்டர். வருடத்துக்கு மூன்று மாதம் இந்தியா வருவது வழக்கம். ராஜேஷ்க்கு அவர் மேல் நல்ல மதிப்பு உண்டு. அவரை சந்திக்க முடிவு செய்தான்.

'நீல நெருப்பா?'
'ஆமா டாக்டர்'
'கால்ல இருந்து ஸ்டார்ட் ஆச்சா?' ராஜேஷ் சொல்லாமலே டாக்டர் கேட்டார்.
'ஆமா டாக்டர். எப்படி கரெக்டா சொல்றீங்க?'
டாக்டர் பதில் சொல்லவில்லை. யோசித்தார்.
'இத நா புத்தகங்கள்ல தான் படிச்சிருக்கேன். இதான் ப்ர்ஸ்ட் டைம் நேரடியா கேள்வி படறேன்'
'என்ன சொல்றீங்க டாக்டர்?'
'ஆமா ராஜேஷ். இட் இஸ் பாசிபிள். மனிதனால கண்டுபுடிக்க முடியாத விவரிக்கமுடியாத சில விஷயங்கள் இந்த உலகத்துல இன்னும் நிறைய இருக்கு. ஆவிகள், மீன் மழை, பார்வையாலேயே ஸ்பூன வளைச்ச யூரி கெல்லர், ஏலியன்ஸ் ன்னு எவ்ளவோ இருக்கு. அதுல இதுவும் ஒண்ணு. உலகத்துல கொஞ்ச பேருக்கு இந்த blueflames விஷயம் நடந்திருக்கு. மக்கள் பார்த்த சாட்சியங்களும் உண்டு. ஆனா விஞ்ஞான ரீதியா இதுக்கு இன்னும் காரணம் கண்டுபுடிக்கல. புடிக்க முடியல. இத பத்தி நா புக்ஸ்ல படிச்சி இருக்கேன். ஏன்? உங்க மதன் இருக்காரே? அவரே இத ஒரு புக்ல சொல்லி இருக்காரே. புக் பேர் கூட..... ஆங் 'மனிதனும் மர்மங்களும்'. இரு. என்கிட்ட அந்த புக் இருக்கா பாக்கறேன். '

டாக்டர் புத்தகத்துடன் வந்தார்.
ஆச்சர்யம்! ராஜேஷ் ஆனந்தை பார்த்த சம்பவம் அப்படியே இதில் எழுதப்பட்டிருந்தது. ராஜேஷ்க்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. தான் பார்த்தது நிஜம்தான். தனக்கு பிரமை இல்லை என்று தெரிந்ததில் சற்று நிம்மதி. ஆனாலும் ஒன்று உறுத்தியது.

'ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். உங்க கிட்ட வந்து பேசினா கொஞ்சம் நிம்மதி கெடைக்கும்ன்னு தான் வந்தேன். ஆனா என் கொழப்பத்துக்கு பதிலே கெடச்சிடுச்சு. '
'ஆனா இன்னும் நிம்மதி கெடைக்கல போலருக்கே? உன் முகத்த பாத்தாலே தெரியுதுப்பா ஏதோ கேள்வி இருக்குன்னு. என்ன விஷயம் ராஜேஷ்?'

ராஜேஷ் அன்று நெருப்பின் நடுவே ஏதோ பார்த்ததை பற்றி கூறினான். 
'கிரீடிங் கார்ட்ல ஏதோ எழுதி இருந்தது டாக்டர். என்னமோ பாத்தேன். எவளோ யோசிச்சும் என்னனு தெரியல.'

டாக்டர் கவலையுடன் யோசித்தார். பெருமூச்சு விட்டு பிறகு பேசினார்.

'ராஜேஷ். இதுக்கு ஒரு வழி இருக்கு. மனோதத்துவமான வழி. ஒரு தெரப்பி. பயப்படும்படி இல்ல. சின்ன கொஸ்டின் அண்ட் அன்செர் செஷன். என் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். சைக்கியாற்றிஸ்ட். அவனை லஞ்ச் டைம் ல போய் பாக்கலாம் வா'

ராஜேஷ் சம்மதித்தான்.

(தொடரும்)

Friday, November 20, 2015

இருளின் நிழல் - நிழல் 1

"காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடியேருமோ? கொஞ்சம் நடித்தேனடி, கொஞ்சம் துடித்தேனடி. இந்த விளையாட்டை ரசித்தேனடி ".....

காதில் இயர்போன்ஸ் இரைந்தது. ராஜேஷ் ஆபீஸில் இருந்து அப்பொழுது தான் வீட்டுக்கு கிளம்பினான். லிப்ட் நோக்கி நடந்தான். இரவு பத்து மணி இருக்கும். வேலை அவ்வளவு அதிகம் இல்லைதான். ஆனால்அன்று லேட்டாக வந்ததால் லேட்டாக கிளம்ப வேண்டியதாயிற்று.  அந்த நேரத்தில் செக்யூரிட்டி உட்பட யாருமே இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தவனுக்கு ஆனந்தை பார்த்ததும் ஆச்சரியம். 

'என்ன ஆனந்த் சார்? இவளோ லேட்டா வொர்க் பண்ணறீங்க?' இயர்போன்ஸய் கழட்டிக்கொண்டே கேட்டான்.
'ஹாய் ராஜேஷ். டெய்லி இவளோ லேட் ஆய்டுது. என்ன பண்றது?'
'கைல என்ன சார் போக்கே?'
'இன்னிக்கு என் பர்ஸ்ட் லவ் அன்னிவேர்சரி'. ஆனந்த் நெளிந்தான். 
'வாவ். கன்க்ராட்ஸ் சார். '  ராஜேஷ் கை நீட்டினான். 
ஆனந்த் தன் வலது கையில் இருந்த ரோஜாக்களையும் க்ரீடிங் கார்டையும் இடது கைக்கு மாற்றி கை குலுக்கினான். அந்த அடுக்குமாடி ஆபீஸில் அவர்களுடையது தான் மேல் மாடி. பேசிக்கொண்டே லிப்ட் அருகே வந்திருந்தார்கள். 

'என்ன சார்? அன்னிவேர்சரி அன்னிக்காவது சீக்கிரம் கெளம்ப வேண்டாமா? இந்த நேரத்துல எங்கயும் கூட்டிட்டு போக முடியாதே.' ராஜேஷ் டவுன் பட்டனை அழுத்திவிட்டு  கேட்டான்.
'என் லவர் அதெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டா. சும்மா மூவி போறோம் அவளோ தான்'
'ரொம்ப லக்கி சார் நீங்க' 
லிப்ட் கதவு திறந்தது. ஆனந்த் நுழைந்தான். ராஜேஷ் எதேச்சையாக பாக்கெட்டில் கை விட்டு தேடினான். 
'ஷிட். பைக் கீ என் டேபிள் லையே இருக்கு. நீங்க போங்க சார். நான் எடுத்துட்டு வரேன்.'  'பாய் ராஜேஷ். குட் நைட்'. லிப்ட் கீழே இறங்கியது.

ராஜேஷ் தன் ஆபீஸ் அறை நோக்கி ஓடினான். சாவி டேபிள் மேலேயே இருந்தது. தன் ஞாபக மறதியை தானே கடிந்துக்கொண்டு சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். லிப்ட் வந்தது. உள்ளே நுழைந்தான். பார்கிங் செல்லும் பட்டனை அழுத்தினான். ஆனந்த்  கையில் இருந்த ரோஜாக்களின் மணம் இன்னமும் வீசியது. லிப்ட் விட்டு வெளி வந்து பைக் நோக்கி நடந்தான். ஆனந்த்தின் ரோஜா இதழ்கள் கீழே சிதறி இருந்தன. 'வீட்டுக்கு எடுத்துட்டு போறதுக்குள்ள எல்லாம் உதிர்ந்து வெறும் காம்பு தான் குடுக்க போறாரு' என்று எண்ணிக்கொண்டே பைக் ஏறினான். பைக் அண்டர்கிரௌண்ட் பார்கிங்கில்  இருந்து வெளியே வந்தது.  வெளியே வந்ததுமே சட்டென பிரேக் போட்டு நிறுத்தினான். ஒரு நிமிடம் மூச்சே நின்று போனது அவனுக்கு. அவனெதிரே தரையில் ரத்த வெள்ளத்தின் நடுவே ஆனந்த். அருகே சிதறி இருந்த சிவப்பு ரோஜாக்கள் ரத்தத்தில் நனைந்து மேலும் சிவப்பாகி இருந்தது. ஆனந்தின் இறுக்கிய கையில் கிரீடிங் கார்டு இன்னமும் இருந்தது.

ராஜேஷ் பைக்கை அப்படியே போட்டுவிட்டு இறங்கி ஓடி வந்தான். உடல் இருக்கும் நிலையை பார்த்தால் அவன் மாடியில் இருந்து விழுந்திருக்க வேண்டும் என்று  தோன்றியது.  ராஜேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'சார் சார்' என்று தூரத்தில் நின்றுக்கொண்டே அழைத்துப்பார்த்தான். ஒரு முனகல் சத்தம் கூட இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. தெரு வரை ஓடினான். அங்கும் யாரும் இல்லை. பக்கத்தில் இருந்த ஆபீஸ் எல்லாம் விளக்கு எரியாமல் இருந்தது. எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். 108-க்கு கால் செய்தான். ஆம்புலன்ஸ் வர இருபது நிமிடம் ஆகுமாம். பொறுமை இல்லாமல் அங்கும் இங்கும் நடந்தான். இருள் அவனை மிரட்டியது. ஆனந்தின் உடலை விட்டு  தள்ளி செல்ல நினைத்த போது அது நடந்தது. 

திடீரென ஆனந்தின் கால் விரல்களில் இருந்து நீலநிறத்தில் நெருப்பு பற்ற ஆரம்பித்தது. ராஜேஷால் என்ன பார்க்கிறோம் என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. அந்த நெருப்பு ஆனந்தின் உடல் முழுக்க பரவியது. கண்ணை பறிக்கும் நீல நிறம். மெழுகு ஏற்றினால் அந்த நெருப்பின் நடுவில் தெரியும் நீலம் போலவே இருந்தது.  சில வினாடிகளிலேயே மொத்த உடலும் எரிந்தது.  வெப்பம் சுடவே  ராஜேஷ் தன கைகளால் கண்களை மூடி விரலிடுக்கின் நடுவே பார்த்தான். நெருப்பின் நடுவே ஏதோ ஒன்று அவன் கண்களில் பட்டது. .

(தொடரும்)

Monday, September 28, 2015

ரூட் சாம்பியன்

இன்போசிஸ் சேந்து ரெண்டு வாரம் இருக்கும். கம்பெனி பஸ்சில என்கூட வர்ற ஒரு அண்ணா என்ன கூப்பிட்டார்.'நீ தான் கடைசி ஸ்டாப்ல இருந்து வர்ற. நான் ஆன்சய்ட் போறேன். நீ ரூட் சாம்பியனா இருக்கியா?' என்று கேட்டார்.

'ரூட் சாம்பியன்னா என்னண்ணே?' 
'ஒண்ணும் இல்லடா. ட்ரான்ஸ்போர்ட் கமிட்டி ஏதாவது சொல்லனும்னா உங்கிட்ட சொல்லுவாங்க. நீ பஸ்ல வரவங்களுக்கு சொல்லணும். பஸ்ல வர்றவங்களுக்கு எதாவது பிரெச்சனைனா உங்கிட்ட சொல்லுவாங்க. நீ பஸ் டிரைவர் கிட்ட சொல்லணும். சரியா?' 

எனக்கு ஒண்ணும் புரியல. ஒத்துகிட்டேன்.

'சூப்பர்டா. இப்போ போய் டிரைவர் அண்ணா கிட்ட என் சீட் கிட்ட இருக்க fanஅ போட சொல்லு?'
'நானா? எப்பிடிண்ணே?'
'இனி எல்லாம் அப்படி தான். அப்டியே அடுத்த ஸ்டாப்ல என் ப்ரெண்ட் வர கொஞ்சம் லேட் ஆகும். ஸ்டாப்ல டூ மினிட்ஸ் வெயிட் பண்ண சொல்லு'
'இல்லண்ணே. நா போய்?'
'இனி எல்லாம் அப்படி தான்.'

டிங்டிங்க்டிங்க்டிங்.. நாயகன் ஆனேன். 

அடுத்த நாள் டிரைவர் அண்ணன் கிட்ட சொன்னேன். இந்த மாதிரி என்ன ரூட் சாம்பியன் ஆக்கிட்டாங்கன்னு. 'ரொம்ப சந்தோசம் சார். கம்பெனி சேர்ந்த ரெண்டு வாரத்துலேயே உங்களுக்கு இவளோ பெரிய பதவி கேடச்சிடுச்சே ' ன்னு கலாய்க்கற மாதிரியே பாராட்டினார். 
என்ன இருந்தாலும் ஒரு வேலைன்னு வந்துடுச்சே. இனிமே ரெண்டாவது சீட்ல தான் ஒக்காரணும்னு முடிவு பண்ணேன். பஸ்ல வர்ற எல்லாருக்கும் என்ன பத்தியும் என் போன் நம்பரும் குடுத்து ஈமெயில் அனுப்பினேன். நாள் ஆக ஆக பதவிப்பலன் கெடைக்க ஆரம்பிச்சுது. 

பர்ஸ்ட் ஸ்டாப் ன்றதால டிரைவர் கூட பேச நேரம் கெடைச்சது. சொந்த வாழ்க்கை, ரோட்டில் குறுக்க வந்தவர்கள், முந்தா நாள் பஸ்ல வந்தவர்கள் பத்தி எல்லாம் பேசுவோம். கிளீனர் பையனும் லைட்டா பழகிட்டான். என்ன பார்த்தா சிரிப்பான்.  நா வர லேட் ஆச்சுனா எனக்காக வெயிட் பண்ணுவாங்க. எங்க எப்ப பாத்தாலும் ஒரு வணக்கம் வைப்பாங்க. நா ஆன்சைட் போயிட்டு வந்தப்போ அவங்களுக்கு சாக்லேட் ஏதோ கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.

இதுல நல்லதும் இருக்கு. கேட்டதும் இருக்கு. புது நண்பர்கள் கெடைச்சாங்க. அவங்களுக்காக பஸ்ஸ  வெயிட் பண்ணி சொல்லி நடந்த பிரச்சனைகளும் இருக்கு. பஸ் டெய்லி சீக்கிரம் ஆபீஸ் போய் சேரணும்ன்னு ரூட்ட மாத்தி 'ஓவர் ஆர்வகோளாறு' ன்னு பேர் வாங்கின கதையும் இருக்கு. நிறைய சொல்லணும்.ஆனா எனக்கு புடிச்ச ஒரு கதை மட்டும் சொல்றேன்.

ஒரு தடவ நானும், என்னோட மனேஜரும் சாயந்தரம் பேசிக்கிட்டே பஸ்க்கு நடந்து போனோம். வழக்கமா பஸ்ல ஏறும் போது எல்லாரையும் ஐடி கார்டு கேப்பாங்க. என்ன தெரியும்ன்றதால கேக்க மாட்டாங்க. அன்னிக்கு எங்க பஸ்ல ஐடி கார்டு செக் பண்ணது பக்கத்து பஸ் பையன். என் பஸ் டிரைவர் அண்ட் கிளீனர் கொஞ்சம் தூரத்துல நின்னு பேசிட்டு இருந்தாங்க. மனேஜர் பஸ் ஏறப்போனப்போ அந்த பக்கத்து பஸ் பையன் 'சார் ஐடி கார்டு?'ன்னு கேட்டான். என் மனேஜர் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுப்புடிச்சி ஐடி கார்டு எடுத்து காமிச்சார். அடுத்து அவன் என்கிட்ட 'சார் ஐடி கார்டு?'ன்னு கேட்டான். நான் என் பர்ஸ் எடுக்க பின்னாடி கை கொண்டு போனேன். அதுக்குள்ள தூரத்துல இருந்த எங்க பஸ் கிளீனர் ஓடி வந்து, 'டேய் யார் கிட்ட ஐடி கார்டு கேக்கற? நீங்க போங்க சார்'  அப்டின்னு என்ன அனுப்பினான். பாஷா லெவல் பீலிங் எனக்கு. என் மனேஜர் இன்னைக்கும் இதை சொல்லி சிரிப்பார்..





Wednesday, September 16, 2015

Why Iceland is called Iceland and Greenland is called Greenland?

Once upon a time, the Norwegian Vikings lost in a war and were running for their lives. After few days of travel, they discovered an island. In summer, the land was covered with green pastures and trees. They decided to settle there. But what if the enemies follow them and find them here? So, they sent word back to Norway that their island was completely covered with ice. They believed that it will deceive the enemies so they would not come to this new land. But that was not enough for them. They found another distant island which was cold and completely covered with ice.  The Vikings called this Greenland and sent word back to Europe that Greenland was more beautiful believing that enemies would actually go there and die due to bad weather. Hence the name Greenland and Iceland.

Though the story above was very popular it is not true. The truth is Iceland was discovered and named first. After a century, a Norwegian, who ran away from Norway, settled in Greenland. He named it 'Greenland' thinking the name would make more people to come and settle.

Interesting read i found in the internet:

When information is presented as non-fiction or fact, people switch on their critical-analysis brain, whereas when information is presented as fiction, they switch on their story brains. Story brains are much more receptive than analytical brains,

Another reason the first fictional story has remained uppermost in your mind is because it was the version you heard first. The version of an event we hear first sticks in our long-term memory, even if it was later found to be false. The newer, corrected version does stick in our mind for a time, then withers away, to be overshadowed once again by the first version. That's why it is said first impressions are best impressions.

Wednesday, April 8, 2015

ஹைக்கூ எனப்படுவது யாதெனின் ....

சுஜாதாவின் வரிகள்.

ஹைக்கூ என்றால் என்ன?

ஹைக்கூ என்பது பதினேழு அசைகள் (சிலபல்ஸ்) கொண்ட ஒரு ஜப்பானிய கவிதை வடிவம். அதை இந்த நூற்றாண்டில் நவீனபடுத்தி மூன்று/நான்கு  வரிக் கவிதைகளாக்கி விட்டனர்.

எது ஹைக்கூ?

ஹைக்கூ என்பது ஒரு snapshot என்று சொல்வார்கள். தினவாழ்வில் நாம் பார்க்கும் ஆச்சர்யமான கணங்களை ஒரு சிறிய கவிதையில் சிறைபடுத்தும்போது எந்தவிதமான உருவகமோ உவமையோ சமூகச்சாடலோ இன்றி வாசகனின் சிந்தனை என்னும் குளத்தில் எறியப்பட்ட ஒரு சிறு கல்லாக இருக்க வேண்டும்.

உதாரணங்கள்:

நள்ளிரவில் 
தூரத்தில் 
ஒரு கதவு சார்த்தப்பட்டது 
-----------------------------------------
சாக்கடையில் 
மிதக்கும் முகமூடி 
மெல்லத் தலையசைக்கிறது 
---------------------------------------------
வெயிலில் 
தலைமயிர் உலர்கிறது 
தலை இல்லாமல் 
--------------------------------------------
முடிவு பெறாத கட்டடம் 
கொசுவலைக்குள் 
கூலிக்காரியின் குழந்தை 
-------------------------------------------
மொட்டை மாடி 
எட்டிப் பார்த்துக் 
குறைக்கும் நாய் 
-------------------------------------------
சைக்கிள் ரிக்க்ஷாவில் 
பாரதி வேடத்தில் 
மூன்று குழந்தைகள்.
------------------------------------------
இறுதி ஊர்வலத்தில் 
உறவினர் அழுகையைவிட 
சப்தமாய் 
பட்டாசு 
-----------------------------------------

எது ஹைக்கூ இல்லை ?

எத்தனை பேர் 
இழுத்தும் என்ன 
சேரிக்குள் வரவில்லை 
தேர்.

சமூக விமர்சனம் பொதிந்திருப்பதால் இது உண்மையான ஹைக்கூ இல்லை.

கல்யாண நேரத்தில் 
வீடு வெள்ளையடிக்கப்பட்டபோது 
விட்டதில் அவள் செருகிவைத்திருந்த 
கனவுகளும் நிறம் மாற்றப்பட்டது 

'கனவுகளை' 'கடிதங்களாய்' மாற்றினால் ஹைக்கூ வடிவம் பெறுகிறது.


நீங்களும் ஹைக்கூ எழுதி பாருங்களேன். நீங்கள் பார்த்த ஆச்சர்யம் ஒன்றை மூன்று வரிகளில் சிறைபடுத்த வேண்டும்.