Monday, March 9, 2015

வீட்டில் ஒருவர்

7th Std B Section. Number of absentees 5 என்று போர்டில் எழுதினேன்,
லஞ்ச் பீரீயட் முடிந்து தமிழ் கிளாஸ் ஆரம்பிக்கும் நேரம்.  ஒரு சாக் பீஸ் எடுத்து ஆசிரியை மேஜையில் வைத்து விட்டு வந்து என் இடத்தில் அமர்ந்தேன். 

'குட் ஆப்டர்நூன்  மிஸ்' எங்கள் கோரஸ் இடையே தமிழ் மிஸ் உள்ளே வந்தார்கள். 
'குட் ஆப்டர்நூன் எல்லாரும் தமிழ் கட்டுரை நோட் எடுங்க.' மிஸ் கேட்டார்கள். 'வீட்டில் ஒருவர்' என்ற தலைப்பில் கட்டுரை உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை பற்றி எழுதி வருமாறு வீட்டு பாடம்.

நான் எழுதி முடித்திருந்தேன். நோட் எடுக்க பையில் கை விட்டு தேடினேன். பையை மடியில் வைத்து தலை விட்டு தேடினேன். கட்டுரை நோட் கொண்டு வரவில்லை. வயிற்றை ஏதோ செய்தது.

எழுந்து நின்றேன். 
'மிஸ்... ' 
'என்ன?'
'கட்டுரை நோட் கொண்டு வரல மிஸ்'.. நா தழுதழுத்தது. 
'கொண்டு வராதவங்க எல்லாம் எழுந்திருங்க' 
எல்லாரும் கொண்டு வந்திருந்தார்கள். என்னை தவிர.

'ஏம்பா? எல்லாரும் கொண்டு வந்திருக்காங்க. உனக்கு என்ன வந்தது?'
மௌனமாய் நின்றேன். 
'கட்டுரை எழுதினியா? இல்ல எழுதாம நோட் கொண்டு வரல ன்னு பொய் சொல்றியா?'
நான் எழுதியதை கொண்டு வந்திருந்தால் மிஸ் என்னை மிகவும் பாராட்டி பேசி இருப்பார்கள். போன முறை அப்படி தான் பாராட்டு பெற்றேன். ஆனால் இன்று? 
'வாயில என்ன கொழுகட்டையா? நீ நல்லா படிக்கற பையன் ன்னு நெனச்சேனே. கிளாஸ் முடியற வரைக்கும் அப்டியே நில்லு'

அவ்வளவு தான். மிஸ் என்னை அடிக்கவில்லை. திட்டவில்லை. ஆனால் இது என்ன? என் கண்ணில் இருந்து ஏதோ பிசுபிசுவென்று வழிகிறதே? அழ கூடாது என்று திடமாக இருந்தேனே? நான் நின்றேன். கண்ணீர் நிற்கவில்லை. 

ஒவ்வொரு மாணவனாக வந்து எழுதியதை படித்தார்கள். என் தந்தை, என் தாய் என போய்  கொண்டே இருந்தது.  மிஸ் உடனே திருத்தி ஒவ்வொருவரின் கட்டுரையிலும் கையெழுத்திட்டார்கள்.  நான் அழுவதை ஓரிரு முறை கவனித்தார்கள். 

கிளாஸ் ஜன்னல் வழியே யாரோ இருவர் வருவது தெரிந்தது. திரும்பி பார்த்தேன். நம்பவே முடியாமல் உற்று பார்த்தேன். ஊரில் இருந்து என் தாத்தா அவர் நண்பர் இன்னொரு தாத்தாவுடன் வந்திருந்தார்கள். 

என் தாத்தா.. அறுபத்தி ஐந்து வயதிருக்கும் அப்போது. கரையேறிய வெள்ளை வேஷ்டி சட்டை. தோளில் துண்டு. இந்த வயதிலும் உழைப்பதின் அடையாளமாக அவரது மெலிந்த தேகம்,. அவரது அனுபவத்தை காட்டும் வரிகள் அவரது நெற்றியில் - சுருக்கங்களாக. எனக்கு தாத்தாவை பிடிக்கும். யோசித்து பார்த்தால்,  தாத்தாவை பிடிக்காத பேரர்கள் என யாரவது உண்டா என்ன? எப்பொழுதாவது ஊரில் இருந்து எங்கள் வீட்டுக்கு வருவது உண்டு. எப்பொழுதும் ஸ்கூல்க்கு வந்ததில்லை.

நான் படிக்கும் வகுப்பு தெரியாமல் ஒவ்வொரு வகுப்பாக எட்டி பார்த்துக்கொண்டே தேடி வந்திருகிறார்கள் இருவரும். ஒரு கணம் நான் இருக்கும் நிலையை நினைத்தேன். கிளாசில் மிஸ்-இடம் திட்டு வாங்கி, கை கட்டி நின்று கொண்டு அழும்  என் நிலையை தான். இந்த நிலையில் தாத்தாவை பார்க்க கூடாது என்று முடிவு செய்தேன். அவர்கள் என்னை பார்க்கும்முன் நான் அமர்ந்து பெஞ்ச் அடியில் குனிந்து கொண்டேன். 

தாத்தாவின் நண்பர் கிளாஸ் உள்ளே வந்து விட்டார். 
'மிஸ்.. நாங்க ஊர்ல இருந்து வந்து இருக்கோம். இவரோட பேரன் இங்க தான் படிக்கறான். செவன்த் ஸ்டாண்டர்ட் தான். ஆனா எந்த கிளாஸ் ன்னு தெரியல. இன்னிக்கே நாங்க ஊருக்கு திரும்பி போறோம். போறதுக்கு முன்னாடி ஒரு தடவ பாத்துட்டு போலாம் ன்னு....' 

இனி தப்ப முடியாது. கண்களை நன்றாக துடைத்து விட்டு எழுந்தேன். 
'மிஸ்.. ' அழைத்தேன். குரல் கம்மியே இருந்தது. 
தாத்தாவின் நண்பர் 'அதோ... அவன் தான்' என்று காட்டினார்.

'போய் பாத்துட்டு அவங்க கெளம்பும் வரை இருந்து அப்பறம் கிளாஸ் க்கு வா'
மிஸ் என்னை அனுப்பினார்கள். தாத்தாவிடம் போய் அமைதியாக நின்றேன். ஆதரவாக என் தோளில் கை போட்டு கொண்டார். அகத்தின் அழகு என் முகத்தில் தெரிந்தது. என்னிடம் ஒன்றும் கேட்காமலேயே ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்.

'மிஸ். ' அமைதியாக அழைத்தார்.
'நல்ல பையன். நல்லா படிப்பான். எதாவது தப்பு பண்ணி இருந்தா தெரியாம தான் பண்ணி இருப்பான். மன்னிச்சிடுங்க'

'அப்படி எல்லாம் இல்ல சார். கிளாஸ் லையே நல்ல ஒழுக்கமான பையன். நல்லா படிப்பான். தமிழ் ல இவன் தான் எப்பவும் பர்ஸ்ட்.  நல்லா வளர்த்து இருக்கீங்க. என்ன? கொஞ்சம் ரோஷக்காரன். ஏன் நோட் எடுத்துட்டு வரல ன்னு கேட்டேன். உடனே கண்ணுல பொல பொல ன்னு தண்ணி. நல்லா வருவான் பாருங்க.'

என்னவோ செய்தது எனக்கு. விட்ட இடத்தில் இருந்து  ஆரம்பித்து மீண்டும் அழுதேன். 

தாத்தா என் கண்ணளவு குனிந்து என்னை பார்த்தார். வாய் விட்டு சிரித்தார். 
தோளில் இருந்த துண்டெடுத்து என்கண்களை துடைத்தார்.
'போ..'என்று என்னை என் இடத்திற்கு அனுப்பினார்.
'ரொம்ப நன்றி மிஸ்'

விடைப்பெற்று சென்றார் என் "வீட்டில் ஒருவர்".

(முற்றும்)


பி.கு. இது உண்மை சம்பவத்தை தழுவிய ஒரு கற்பனை கதையே. 

No comments:

Post a Comment