காலையிலேயே
முடிவெடுத்தேன்
கவிதை
எழுதிவிடுவது என்று
காலம் காலமாக
காத்திருக்கிறது
காகிதமும் என்
பேனாவும்
எதைப்பற்றி
எழுத?
கூதலும்
குளிர்க்காலப்பறவையும்
என்றெல்லாம்
எழுத
இலக்கியம்
தெரியாது எனக்கு
காதலியை பற்றி
எழுதலாம்.
கட்டியவள்
கோபிப்பாள்.
குட்டியாக
சண்டை வரும்.
காதலை
பற்றியாவது எழுதலாம்.
நான்
செய்ததெல்லாம்
காதலா என்றே
தெரியாது.
கவிதை எழுதும்
நண்பர்களை
கேட்கலாம்.
கடலை போடும்
நண்பர்கள்
மட்டுமே அறிமுகம்
க, கா
வென்று ஆரம்பித்து
கண்ட இடத்தில்
வரியை மடக்கினால்
கவிதை என்றாகி
விடுமோ?
உத்வேகத்துக்காக
ஜன்னலின்
வெளியே
உற்றுப்
பார்த்தேன்
'நான் தான்
கிடைத்தேனா?' என
சற்றே
முறைத்தது அணில்
கடிகார மணி
சத்தம்!
கவிதை தரவில்லை
கடமையை
உணர்த்தியது
கவிதை எழுதும்
காலமெல்லாம்
கடந்து விட்டேனோ?
களைத்தது மனம்.
கள்ளிக்காட்டு
இதிகாசமா
எழுத கேட்டேன்?
குறைந்தது
வெள்ளை
ஜிப்பா-வேனும்
இருக்க
வேண்டும் போல
காகிதத்தை
கசக்கினேன்
எறிய மனமில்லை
கவிதை
கிடைக்கும்வரை இந்த
கருமத்தை
படியுங்கள்