Tuesday, December 29, 2015

இருளின் நிழல் - நிழல் 2

ஆம்புலன்ஸ் வந்திருந்தது. தரையில் வெறும் ரத்தம் மட்டுமே இருந்தது. உடல் இல்லை. ஒன்றும் புரியாமல் முழித்த  ராஜேஷை சரமாரியாக கேள்வி கேட்டார்கள். என்னவென்று சொல்வது? உண்மையை சொல்லுவதை தவிர வேறு வழியே இல்லை ராஜேஷ்க்கு.

நடந்ததை நேரில் பார்த்த அதிர்ச்சி, எப்படி சொல்வது என்று தெரியாத குழப்பம் இரண்டும் சேர்ந்து அவன் வாய் குழறியது. உள்ளது உள்ளபடி சொன்னான். திரும்பத் திரும்ப சொன்னான். நீல நெருப்பு உடலை விழுங்கியது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? போலீஸ் அவனை ஸ்டேஷனில் விசாரிக்க அழைத்து சென்றது. கோர்ட் காவலில் வைத்தார்கள். மருத்துவ பரிசோதனை செய்தார்கள். லை டிடெக்டர் சோதனையும் செய்தாயிற்று. பாடியே இல்லாத நிலையில் போலீஸ் வேறு என்ன தான் செய்யும். ராஜேஷ் ஜாமீனில் வெளியே வந்தான்.

ஆபீஸ் சென்று ஒரு மாதம் ஆனது. வீட்டில் அளிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான கவனிப்பு அவனுக்கு பிடிக்கவில்லை. யாரும் தான் சொன்னதை நம்பவில்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அன்று அவன் நெருப்பின் நடுவே பார்த்தது என்ன என்று அவனால் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. மனநிம்மதி இழந்து இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று யோசித்தான். அப்போது தான் அவனது குடும்ப நண்பரான டாக்டரின் நினைவு வந்தது. அப்பாவின் இளம்வயது சிநேகிதர். கிரீன் கார்டு ஹோல்டர். வருடத்துக்கு மூன்று மாதம் இந்தியா வருவது வழக்கம். ராஜேஷ்க்கு அவர் மேல் நல்ல மதிப்பு உண்டு. அவரை சந்திக்க முடிவு செய்தான்.

'நீல நெருப்பா?'
'ஆமா டாக்டர்'
'கால்ல இருந்து ஸ்டார்ட் ஆச்சா?' ராஜேஷ் சொல்லாமலே டாக்டர் கேட்டார்.
'ஆமா டாக்டர். எப்படி கரெக்டா சொல்றீங்க?'
டாக்டர் பதில் சொல்லவில்லை. யோசித்தார்.
'இத நா புத்தகங்கள்ல தான் படிச்சிருக்கேன். இதான் ப்ர்ஸ்ட் டைம் நேரடியா கேள்வி படறேன்'
'என்ன சொல்றீங்க டாக்டர்?'
'ஆமா ராஜேஷ். இட் இஸ் பாசிபிள். மனிதனால கண்டுபுடிக்க முடியாத விவரிக்கமுடியாத சில விஷயங்கள் இந்த உலகத்துல இன்னும் நிறைய இருக்கு. ஆவிகள், மீன் மழை, பார்வையாலேயே ஸ்பூன வளைச்ச யூரி கெல்லர், ஏலியன்ஸ் ன்னு எவ்ளவோ இருக்கு. அதுல இதுவும் ஒண்ணு. உலகத்துல கொஞ்ச பேருக்கு இந்த blueflames விஷயம் நடந்திருக்கு. மக்கள் பார்த்த சாட்சியங்களும் உண்டு. ஆனா விஞ்ஞான ரீதியா இதுக்கு இன்னும் காரணம் கண்டுபுடிக்கல. புடிக்க முடியல. இத பத்தி நா புக்ஸ்ல படிச்சி இருக்கேன். ஏன்? உங்க மதன் இருக்காரே? அவரே இத ஒரு புக்ல சொல்லி இருக்காரே. புக் பேர் கூட..... ஆங் 'மனிதனும் மர்மங்களும்'. இரு. என்கிட்ட அந்த புக் இருக்கா பாக்கறேன். '

டாக்டர் புத்தகத்துடன் வந்தார்.
ஆச்சர்யம்! ராஜேஷ் ஆனந்தை பார்த்த சம்பவம் அப்படியே இதில் எழுதப்பட்டிருந்தது. ராஜேஷ்க்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. தான் பார்த்தது நிஜம்தான். தனக்கு பிரமை இல்லை என்று தெரிந்ததில் சற்று நிம்மதி. ஆனாலும் ஒன்று உறுத்தியது.

'ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். உங்க கிட்ட வந்து பேசினா கொஞ்சம் நிம்மதி கெடைக்கும்ன்னு தான் வந்தேன். ஆனா என் கொழப்பத்துக்கு பதிலே கெடச்சிடுச்சு. '
'ஆனா இன்னும் நிம்மதி கெடைக்கல போலருக்கே? உன் முகத்த பாத்தாலே தெரியுதுப்பா ஏதோ கேள்வி இருக்குன்னு. என்ன விஷயம் ராஜேஷ்?'

ராஜேஷ் அன்று நெருப்பின் நடுவே ஏதோ பார்த்ததை பற்றி கூறினான். 
'கிரீடிங் கார்ட்ல ஏதோ எழுதி இருந்தது டாக்டர். என்னமோ பாத்தேன். எவளோ யோசிச்சும் என்னனு தெரியல.'

டாக்டர் கவலையுடன் யோசித்தார். பெருமூச்சு விட்டு பிறகு பேசினார்.

'ராஜேஷ். இதுக்கு ஒரு வழி இருக்கு. மனோதத்துவமான வழி. ஒரு தெரப்பி. பயப்படும்படி இல்ல. சின்ன கொஸ்டின் அண்ட் அன்செர் செஷன். என் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். சைக்கியாற்றிஸ்ட். அவனை லஞ்ச் டைம் ல போய் பாக்கலாம் வா'

ராஜேஷ் சம்மதித்தான்.

(தொடரும்)