Friday, November 20, 2015

இருளின் நிழல் - நிழல் 1

"காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடியேருமோ? கொஞ்சம் நடித்தேனடி, கொஞ்சம் துடித்தேனடி. இந்த விளையாட்டை ரசித்தேனடி ".....

காதில் இயர்போன்ஸ் இரைந்தது. ராஜேஷ் ஆபீஸில் இருந்து அப்பொழுது தான் வீட்டுக்கு கிளம்பினான். லிப்ட் நோக்கி நடந்தான். இரவு பத்து மணி இருக்கும். வேலை அவ்வளவு அதிகம் இல்லைதான். ஆனால்அன்று லேட்டாக வந்ததால் லேட்டாக கிளம்ப வேண்டியதாயிற்று.  அந்த நேரத்தில் செக்யூரிட்டி உட்பட யாருமே இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தவனுக்கு ஆனந்தை பார்த்ததும் ஆச்சரியம். 

'என்ன ஆனந்த் சார்? இவளோ லேட்டா வொர்க் பண்ணறீங்க?' இயர்போன்ஸய் கழட்டிக்கொண்டே கேட்டான்.
'ஹாய் ராஜேஷ். டெய்லி இவளோ லேட் ஆய்டுது. என்ன பண்றது?'
'கைல என்ன சார் போக்கே?'
'இன்னிக்கு என் பர்ஸ்ட் லவ் அன்னிவேர்சரி'. ஆனந்த் நெளிந்தான். 
'வாவ். கன்க்ராட்ஸ் சார். '  ராஜேஷ் கை நீட்டினான். 
ஆனந்த் தன் வலது கையில் இருந்த ரோஜாக்களையும் க்ரீடிங் கார்டையும் இடது கைக்கு மாற்றி கை குலுக்கினான். அந்த அடுக்குமாடி ஆபீஸில் அவர்களுடையது தான் மேல் மாடி. பேசிக்கொண்டே லிப்ட் அருகே வந்திருந்தார்கள். 

'என்ன சார்? அன்னிவேர்சரி அன்னிக்காவது சீக்கிரம் கெளம்ப வேண்டாமா? இந்த நேரத்துல எங்கயும் கூட்டிட்டு போக முடியாதே.' ராஜேஷ் டவுன் பட்டனை அழுத்திவிட்டு  கேட்டான்.
'என் லவர் அதெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டா. சும்மா மூவி போறோம் அவளோ தான்'
'ரொம்ப லக்கி சார் நீங்க' 
லிப்ட் கதவு திறந்தது. ஆனந்த் நுழைந்தான். ராஜேஷ் எதேச்சையாக பாக்கெட்டில் கை விட்டு தேடினான். 
'ஷிட். பைக் கீ என் டேபிள் லையே இருக்கு. நீங்க போங்க சார். நான் எடுத்துட்டு வரேன்.'  'பாய் ராஜேஷ். குட் நைட்'. லிப்ட் கீழே இறங்கியது.

ராஜேஷ் தன் ஆபீஸ் அறை நோக்கி ஓடினான். சாவி டேபிள் மேலேயே இருந்தது. தன் ஞாபக மறதியை தானே கடிந்துக்கொண்டு சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். லிப்ட் வந்தது. உள்ளே நுழைந்தான். பார்கிங் செல்லும் பட்டனை அழுத்தினான். ஆனந்த்  கையில் இருந்த ரோஜாக்களின் மணம் இன்னமும் வீசியது. லிப்ட் விட்டு வெளி வந்து பைக் நோக்கி நடந்தான். ஆனந்த்தின் ரோஜா இதழ்கள் கீழே சிதறி இருந்தன. 'வீட்டுக்கு எடுத்துட்டு போறதுக்குள்ள எல்லாம் உதிர்ந்து வெறும் காம்பு தான் குடுக்க போறாரு' என்று எண்ணிக்கொண்டே பைக் ஏறினான். பைக் அண்டர்கிரௌண்ட் பார்கிங்கில்  இருந்து வெளியே வந்தது.  வெளியே வந்ததுமே சட்டென பிரேக் போட்டு நிறுத்தினான். ஒரு நிமிடம் மூச்சே நின்று போனது அவனுக்கு. அவனெதிரே தரையில் ரத்த வெள்ளத்தின் நடுவே ஆனந்த். அருகே சிதறி இருந்த சிவப்பு ரோஜாக்கள் ரத்தத்தில் நனைந்து மேலும் சிவப்பாகி இருந்தது. ஆனந்தின் இறுக்கிய கையில் கிரீடிங் கார்டு இன்னமும் இருந்தது.

ராஜேஷ் பைக்கை அப்படியே போட்டுவிட்டு இறங்கி ஓடி வந்தான். உடல் இருக்கும் நிலையை பார்த்தால் அவன் மாடியில் இருந்து விழுந்திருக்க வேண்டும் என்று  தோன்றியது.  ராஜேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'சார் சார்' என்று தூரத்தில் நின்றுக்கொண்டே அழைத்துப்பார்த்தான். ஒரு முனகல் சத்தம் கூட இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. தெரு வரை ஓடினான். அங்கும் யாரும் இல்லை. பக்கத்தில் இருந்த ஆபீஸ் எல்லாம் விளக்கு எரியாமல் இருந்தது. எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். 108-க்கு கால் செய்தான். ஆம்புலன்ஸ் வர இருபது நிமிடம் ஆகுமாம். பொறுமை இல்லாமல் அங்கும் இங்கும் நடந்தான். இருள் அவனை மிரட்டியது. ஆனந்தின் உடலை விட்டு  தள்ளி செல்ல நினைத்த போது அது நடந்தது. 

திடீரென ஆனந்தின் கால் விரல்களில் இருந்து நீலநிறத்தில் நெருப்பு பற்ற ஆரம்பித்தது. ராஜேஷால் என்ன பார்க்கிறோம் என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. அந்த நெருப்பு ஆனந்தின் உடல் முழுக்க பரவியது. கண்ணை பறிக்கும் நீல நிறம். மெழுகு ஏற்றினால் அந்த நெருப்பின் நடுவில் தெரியும் நீலம் போலவே இருந்தது.  சில வினாடிகளிலேயே மொத்த உடலும் எரிந்தது.  வெப்பம் சுடவே  ராஜேஷ் தன கைகளால் கண்களை மூடி விரலிடுக்கின் நடுவே பார்த்தான். நெருப்பின் நடுவே ஏதோ ஒன்று அவன் கண்களில் பட்டது. .

(தொடரும்)