Tuesday, December 30, 2014

உடுக்கை கிழிந்தவன்

சின்ன வயசுல பள்ளி கூடத்துக்கு நானும் என் அண்ணனும் ஸ்கூல் பஸ் ல தான் போவோம். 
'இது என்ன பஸ் ஆ? இல்ல மீன் மார்க்கெட் ஆ' அப்பிடின்னு டிரைவர் அண்ணா திட்டற அளவுக்கு எப்பவும் ஒரே சத்தம்மா இருக்கும். அரட்டை, சண்டை, பாட்டுக்கு பாட்டு, தள்ளுமுள்ளு எல்லாம் நடக்கும். 

அன்னிக்கு ஒரு நாள்...அப்போ நான் நாலாவது படிச்சிக்கிட்டு இருந்தேன். 
.........@@@ @@.......
(சுருள் போட்டாச்சு இல்ல.. பிளாஷ்பேக் ஆரம்பம்). 

காலைல பஸ்ல போய்ட்டு இருந்தோம். லைட் பிரவுன் கலர்ல கோடு போட்ட சட்டை, அதே கலர்ல ட்ரௌசெர். 
டக் இன் பண்ணி ஷ்ஷு போட்டு வகிடு எடுத்து தலை வாரி.
வழக்கமான நாளா தான் ஆரம்பிச்சது. 
ஆனா அன்னிக்கு அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்ன்னு நா நெனச்சிக்கூட பார்த்து இருக்க மாட்டேன்.

பக்கத்துல உக்கார்ந்து இருந்த சரவணன் கூட சண்ட போட, தள்ளுமுள்ளு நடக்க, நா சீட்ல இருந்து கீழ விழ...
மாமா ட்ரௌசெர் கிழிஞ்சிச்சு. நெஜமாவே கிழிஞ்சிடுச்சு. 
"எண் ஏழு வடிவத்தில் கிடைக்கோடு (horizontal line) மூன்று சென்டிமீட்டர்  செங்குத்து (vertical) நான்கு சென்டிமீட்டர் அளவில்" கிழிஞ்சி உள்ள போட்டு இருந்த பச்சை ஜட்டி அப்பட்டமா தெரியற மாதிரி ஆய்டுச்சு. 

பஸ் விட்டு இறங்க பேக் மாட்டும் போது தான் சரவணன் சொன்னான். 
'டேய்.. ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா'. 
எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அண்ணன் முன்னாடியே அவன் நண்பர்கள் கூட இறங்கி போய்ட்டான். அண்ணன் போனா என்ன? மானம் காக்க நண்பன் இருக்கானே. சரவணன் ஐடியா குடுத்தான். 

'பேக் நல்லா லூஸா போடு.' 
'ட்ரௌசெர் மறையற அளவுக்கு லூஸ் பண்ணி மாட்டிக்கோ' 
'அப்பவும்  தெரியுதுடா' 
'சரி நீ முன்னாடி போ. நா உன் பின்னாடியே க்ளோஸா நடந்து வரேன்.' 

அப்படியே செஞ்சோம். எப்டியோ ஒரு வழியா தட்டுத்தடுமாறி கிளாஸ் ல வந்து ஒக்காந்தாச்சு.
சரவணன் சொன்னான்.
'என்ன ஆனாலும் சரி. இன்னிக்கு ஃபுல்லா நீ பெஞ்ச விட்டு எழுந்துக்காத' 
'டேய் லஞ்ச் டைம்ல க்ரௌண்டுக்கு போய் சாப்பிடணுமே டா'
'உனக்கு சோறு முக்கியமா? மானம் முக்கியமா?'

முடிவு செய்தேன். 
'இதோட சாயந்தரம் தான் எடத்த விட்டு எழுந்துக்கிறேன். எப்டி வந்தமோ அப்டியே போய் பஸ்ல ஒக்காந்திடனும்'
எடுத்த முடிவ வெற்றிகரமா செயல் படுத்தவும்முடிந்தது - ரெண்டாவது பீரியட் ஆரம்பிக்கும் வரை.

'Fifth standard B section கிளாஸ் யாருக்கு தெரியும்?' மிஸ் கேட்டாங்க.
'மிஸ். இவனுக்கு தெரியும் மிஸ். அது இவங்க அண்ணன் கிளாஸ்' முன்னாடி இருந்தவன் என்னை காட்டினான். 
'இங்க வாப்பா, இந்த நோட் எல்லாம் எடுத்துட்டு போய் அந்த கிளாஸ்ல வெச்சிட்டு வா'
போச்சுடா....... என்ன செய்யறதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன். 

'எனக்கு கிளாஸ் தெரியாது மிஸ்' 
'எனக்கு தெரியும் மிஸ். நா எடுத்துட்டு போறேன்' சரவணன் உதவினான்.
ஹப்பாடா.
'ஓகே.. ரெண்டு பேரும் வந்து எடுத்துட்டு போங்க.'
அய்யையோ.
'என்னடா ஒக்காந்துக்கிட்டே இருக்க? எழுந்து வா' மிஸ் அதட்டினாங்க.
இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? எழுந்து போனேன்.

நா ஒக்காந்திருந்த கடைசி பெஞ்சில இருந்து ரெண்டு வரிசை தாண்டறதுக்குள்ள என் பின்னாடி ஒரே சலசலப்பு. முதல் மூணு வரிசை கேர்ள்ஸ் வேற. 
போய் குனிந்து நோட்ஸ் எல்லாம் தூக்கினேன்.  'டேய் ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா ...டேய்.. டேய்' பின்னாடி இருந்து பசங்க கத்தறாங்க. நா காதுல வாங்கிக்காம நோட்ஸ் எல்லாம் தூக்கிகிட்டு நடந்தேன். 
கண்டிப்பா கேர்ள்ஸ், மிஸ் உட்பட மொத்த கிளாஸும் பார்த்து இருக்கும். கண்ணுல லைட்டா தண்ணி. 
வெளிய காட்டிக்காம எதுவும் காதுல வாங்கிக்காம யாரையும் பாக்காம கிளாஸ் விட்டு நடந்தேன். 
கூட சரவணன் கொஞ்சம் நோட்ஸ் தூக்கிட்டு வந்தான். இன்னும் யார்யார் எல்லாம் பாக்க போறாங்களோ? 

அண்ணன் கிளாஸ் ஸ்கூலோட இன்ணோரு கோடில இருக்கு.
சரவணன என் பின்னாடி நடந்து வர சொல்லிட்டு யோசிச்சிகிட்டே நடந்து போனேன். 
'சரவணா நா கிளாஸ் வெளியவே ஒளிஞ்சி நிக்கறேன். நீ போய் உன்னோட கைல இருக்கறத உள்ள வெச்சிட்டு வந்து என்னோடது வாங்கிட்டு போய் வெச்சிடு ஓகேவா?' 
'சரிடா. நீ இங்கயே இரு' 

சொன்னபடி செய்தான். நா அண்ணன் கிளாஸ் உள்ள போகவே இல்ல. 
மறுபடியும் ஹப்பாடா. 
சரவணன் வெளிய வந்து சொன்னான் 
'நல்ல வேலை எல்லாருக்கும் கிளாஸ் நடக்கறதுனால ஒரு பயலும் வெளிய இல்ல. இன்டர்வெல் டைம் ல வந்து இருந்தா கண்டிப்பா மாட்டி இருப்போம்' 
சொல்லி முடிக்கும் போதே இன்டர்வெல் பெல்அடித்தது.
மறுபடியும் அய்யையோ. 

நா அப்டியே சுவர் ஓரமா போய்  சாஞ்சிக்கிட்டேன். 
எல்லா கிளாஸ்ல இருந்தும் பசங்க எல்லாம் வெளிய வர ஆரம்பிச்சிட்டாங்க.
'என்னடா பண்றது?' 
'தெரியலையே' 
யோசிச்சோம். ஐடியா வந்தது.

'சரவணா. நாம எப்பவும் பஸ் விளையாட்டு விளையாடுவோமே?'
'ஆமா?'
'அதே மாதிரி நீ என்ன புடிச்சிக்கோ. நீ என் ட்ரௌசெர மறைச்ச மாதிரியும் இருக்கும். 
நாம வேகமாவும் இங்க இருந்து ஓடிடலாம்'
'சூப்பர் ஐடியா'

(பஸ் விளையாட்டு -- சிறார்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த விளையாட்டை ஆட இரண்டு நபர்கள் தேவை. முதல் நபர் பஸ் போன்று முன்னே நிற்க வேண்டும்.இரண்டாம் நபர் ஓட்டுனர் போன்று முதல் நம்பரின் பின்னால் நெருக்கமாக நின்று கொள்ள வேண்டும். இரண்டாம் நபர் முதல் நபரின் இரு கைகளையும் முழங்கைக்கு மேல பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிடித்துக்கொண்டு வலது கையை திருகினால் முடுக்கு (accelerator). இடது கையை அமுக்கினால் நிறுத்தம் (brake). தலை முடியை இழுத்தால் கியர். இரண்டாம் நபரின் இயக்கத்திற்கு ஏற்ப முதல் நபர் வாயால் 'டுர்ர்ர்ர்' என சத்தத்தை எழுப்பிக் கொண்டே ஓட வேண்டும்.) 

பஸ் விளையாட்டு வொர்க் ஆச்சு. கிளாஸ்ல வந்து ஒக்காந்தாச்சு. 
'ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா' ன்னு சொன்ன எல்லாருக்கும் 'தெரியும் டா' ன்னு ஒரு வரில பதில் சொல்லி முடிச்சிக்கிட்டேன். நல்ல வேலையா அதுக்கு மேல யாரும் கிண்டல் பண்ணல. 

ஒரு வழியா சாய்ந்தரம் வரைக்கும் சமாளிச்சிட்டேன். இனிமே பஸ் வர வரைக்கும் சமாளிச்சா போதும். 
ஆனா ஸ்கூல் முடிஞ்சு ஒரு மணி நேரம் கழிச்சி தான் பஸ் வரும்.
வழக்கமா அது வரைக்கும் நான் என் நண்பர்கள் என் அண்ணன் அவன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கிரௌண்டுக்கு போய் விளையாடுவோம். அன்னிக்கு நா வரல ன்னு சொல்லிட்டேன். 

அண்ணன் வந்து கேட்டான். simple conversation. ஆனா வாழ்க்கைக்கும் மறக்க மாட்டேன்.

'என்னடா?'
'ட்ரௌசெர் கிழிஞ்சிடுச்சுடா' காமிச்சேன். 
'அப்பறம் ஏன் டக் இன் பண்ணி இருக்க? ஷர்ட் எடுத்து வெளிய விட்டு கவர் பண்ண வேண்டியது தானே?'

அடச்ச்ச்ச்சய்ய்ய்ய். 
காலைல இருந்து இது எனக்கு தோணலயே. 

சட்டைய எடுத்து வெளிய விட்டுட்டு விளையாட போயிட்டேன்.